உள்நாடு

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் புதிய அதிபராக இக்ராம் அஹ்மத் தெரிவு

தான் கற்ற அஹதிய்யா பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்ற இக்ராம் அஹ்மத் அவர்கள் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணம் மிக்கவராவார்.

கஹட்டோவிட்டாவை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்ட இவர் அஹ்மத் பாரி (BA Kuwait) – கைருன் நதா தம்பதிகளின் செல்வப் புதல்வராக 1997.07.16 ஆம் திகதி பிறந்தவராவார்.

சிறு பராயம் முதல் பெற்றோர்களின் அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் நல்லொழுக்கம், மார்க்க அறிவு, சிறந்த கல்வி ஞானம் பெற்று வளர்ந்த இக்ராம் அஹ்மத் அவர்கள் பாடசாலைத் தேர்ச்சியிலும், ஆன்மீக கல்வியிலும் சிறந்து விளங்கினார்.

அல் முஸ்தபவிய்யாஹ் குர்ஆன் மத்ரஸாவில் ஆரம்ப மார்க்கக் கல்வியைத் தொடங்கிய இவர் இறுதி வரை அதே மத்ரஸாவில் திறமையாகக் கற்றார். அதே பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அஹதிய்யா பாடசாலையிலும் ஆரம்பம் முதலே சன்மார்க்க,ஒழுக்க விழுமியங்களை கற்றார். விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல சிறு வயது முதலே ஆன்மீக லௌகீக அறிவுத் துறைகளில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உடையவராக இருந்தார்.

பாடசாலைக் கல்வியை கஹட்டோவிட்ட அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவர் தோற்றிய முதல் அரச போட்டிப்பரீட்சையாகக் கருதப்படும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 2007 ஆம் ஆண்டு தோற்றி சிறந்த புள்ளியைப்பெற்று சித்தியடைந்தார்.

அதேபோல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வாராந்தம் நடைபெற்று வந்த அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையிலும் ஆரம்ப மாணவர்களில் ஒருவராக இணைந்து சன்மார்க்கக் கல்வியையும், ஆளுமை விருத்தியையும், தலைமைத்துவப் பண்புகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் பல போட்டிகளிலும்,மாணவர் மன்றங்கள், மீலாது விழா போட்டிகளின் போது பல்வேறு இஸ்லாமிய நிகழ்வுகள், கலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளையும் பெற்று தன்னை ஆளுமையுள்ள ஒருவாராக மாற்றுவதற்கு அஹதிய்யாவில் காணப்பட்ட சகல வாய்ப்புக்களையும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பாக அஹதிய்யா பாடசாலை மூலம் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைநிலைப்பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டார். அதேபோல் இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப்படும் இறுதி நிலைச்சான்றிதழ் பரீட்சைக்கும் 2012 ஆம் ஆண்டு தோற்றி அதிதிறமைச்சித்தியைப் பெற்றுக்கொண்டார்.
சன்மார்க்கக் கல்வியையும், பரீட்சைகளையும் வெற்றி கரமாக முகம்கொடுத்த இக்ராம் அஹமத் பாடசாலைக் கல்வியிலும் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்தார்.

இதற்கு சான்றாக தான் முகம் கொடுத்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 2013 ஆம் ஆண்டு தோற்றி 6A B 2C எனும் சிறந்த பெறுபேற்றை பெற்றதுடன் அதே பாடசாலையாகிய அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் கலைத்துறையில் உயர் தரத்தையும் தொடர்ந்தார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சையில் (2A,1B – 1.8775) எனும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொடுத்து வெட்டுப்புள்ளியை தாண்டிய இஸட் புள்ளியையும் பெற்று இரண்டரை தசாப்தங்களுக்குப் பின் குறித்த பாடசாலையில் இருந்து ஆண் மாணவர் சார்பில் பல்கழைக்கழகத்துக்கு தான் தெரிவாகியதன் மூலம் சாதனையை நிலைநாட்டினார்.

இது தவிர பாடசாலைக் காலங்களில் இஸ்லாமிய தினப் போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, விவாதப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பல கலை நிகழ்ச்சிப் போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு மட்டங்களில் முதலிடம் வரைக்கும் சிறந்து விளங்கினார்.

பின்னர் இலங்கையின் முதல்தர அரச பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கழைக்கழகத்துக்குத் தெரிவாகிய இவர் மெய்யியல் துறையில் இளம்கலை சிறப்பு பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

2017 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை BA Honours in Philosophy சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர் ஒரு வருட காலம் அதே பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

2022 இல் திருமண வாழ்வில் இணைந்து கொண்ட இவர் திருமணத்தின் பின்பும் தனது பட்டப்பின்படிப்பை தொடர்ந்தார். உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டே முது தத்துவமாணி (M. Phil) கற்கை நெறியை தொடர்ந்தார். பல்கலைக்கழக உயர் கற்கை நெறியின் போது மத ஒப்பாய்வு, மற்றும் இஸ்லாமிய உளவியல் போன்ற தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

தான் பல்கலைக்கழகத்திலே முது தத்துவமாணி பட்டப்பின்படிப்பைதொடர்ந்து கொண்டே பள்ளிவாசல் இமாமாகவும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியராகவும், கவிதை கட்டுரை எழுத்தாளராகவும், சிறந்த சன்மார்க்கப் போதகராகவும், மத்ரஸாக்களின் வருகைதரு விரிவுரையாளராகவும், அஹதிய்யா ஆசிரியராகவும் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், இறுதியில் உப அதிபராகவும் கடமையாற்றி வருவதென்பது இவருக்கே உரிய சிறப்பம்சமாகும்.

மாணவர்களுக்கு வெறுமனே பரீட்சைக்கான அறிவை மட்டும் வழங்காமல் அதனுடன் பொறுப்புணர்வுள்ள நல்லொழுக்கமுடைய மாணவர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான நல்லறிவுரைகளையும் தனக்கென்ற தனிப்பாணியில் மாணவர்களை திறமையுடன் வழிநடாத்துகின்றார் என்பது அவரது பாட போதனைகளின் போது அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற அஹதிய்யா நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிபர் பதவிக்கு சகோதரர் இக்ராம் அஹ்மத் அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் முழுமையான சம்மதத்துடன் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தான் கல்வி கற்ற அஹதிய்யா பாடசாலையின் அதிபராக வரும் வரையில் ஆளுமை விருத்தி, கல்வி அபிவிருத்திக்கான பயணத்திலும், ஏனைய கலை கலாசார நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்தியும், பரீட்சைகளில் உயர் சித்திகளை பெற்றும், சன்மார்க்க கல்வியையும் சிறப்பாக பெற்றுக்கொண்ட நிலையில் அஹதிய்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் இக்ராம் அஹ்மத் அவர்களின் கல்விப் பயணம் இன்றைய ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணம் மிக்கதாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்பதுபோல தான் பெற்ற அறிவை எல்லோரும் பயனடையும் விதத்தில் பணியாற்றுவதும், தான் கற்ற கல்விக்கூடத்தில் அதிபராக நியமனம் பெற்று அனைத்து மாணவர்களும் சிறந்து விளங்குவதற்காக பொறுப்பேற்று சேவையாற்றுவது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் சகோதரர் இக்ராம் அவர்கள் புதிய அதிபராக ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் – கஹட்டோவிட்ட)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *