ரோஹித்தின் ருத்ர தாண்டவத்தால் ஆஸியின் அரையிறுதி கேள்விக்குறியானது; அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் குழு 1 இன் தீர்மாணமிக்க போட்டி ஒன்றில் ரோஹித் சர்மாவின் அதிரடியால் அவுஸ்திரேலிய அணியை 24 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடாத்துகின்ற 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் 2ஆவது சுற்றான சுப்பர் 8 சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில் தான் சந்தித்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று ஆப்கான் அணியுடன் தோல்வியுற்று வென்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு சென் லூசியாவிலுள்ள டெரன் சமி மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மிச்சல் மார்ஸ் களத்தடுப்பை தேர்வு செய்ய இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான ரோஹித் மற்றும் கோஹ்லி ஜோடி களம் நுழைந்தது. போட்டியின் ஹசில்வூட் வீசிய 2ஆவவது ஓவரின் 4ஆவது பந்தில் கோஹ்லி டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் களத்திலிருந்த ரோஹித் மிச்சல் ஸ்டாக்கின் 3ஆவது ஓவரில் 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு 4 ஓ;டத்தை அடித்து மிரட்டினார். தொடர்ந்து அதிரடியில் ருத்திர தாண்டவம் ஆடிய ரோஹித் அரைச்சதம் கடந்து 41 பந்துகளில் 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 90 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களில் சூரியகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும் , சிவம் துபே 28 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஸ்டார்க் மற்றும் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 206 என்ற எட்டக் கடினமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரரான டேவிட் வோர்னர் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து மோசமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் 2ஆவது விக்கெட்டில் இணைந்து கொண்ட ட்ரவீஸ் ஹெட் மற்றும் மிச்சல் மார்ஸ் ஜோடி தமக்கிடையில் வேகமான 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருக்க அக்ஷெர் படேலின் அசத்தாலான பிடியெடுப்பில் மார்ஸ் 37 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்தும் களத்திலிருந்து இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த ஹெட் அரைச்சதம் கடந்தார். மற்றைய வீரர்கள் நிலைக்காமல் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 18ஆவது ஓவரில் நம்பிக்கை கொடுத்த ஹெட் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தமையால் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் 6 புள்ளிகளுடன் குழு 1 இல் முதலிடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்திய அணியுடன் தோற்றுப் போன அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமெனில் இன்று காலை 6 மணிக்கு இடம்பெறள்ள ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2ஆவது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)