விளையாட்டு

தம் கிரிக்கெட் வீரர்களின் வரலாற்று வெற்றியை வீதிக்கு இறங்கி ஆரவாரத்துடன் கொண்டாடும் ஆப்கான் மக்கள்

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றமையை அந்நாட்டு மக்கள் மிகப் பெரிய ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் இடம்பெற்று வரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தன் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் பலமிக்க அணியான நியூஸிலாந்து அணியை 75 ஓட்டங்களுக்குள் சுருட்டி 84 ஓட்டங்களால் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. பின்னர் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மாத்திரம் தோற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் குழு சீ இல் இருந்து 2ஆம் அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவானது.

பின்னர் இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றில் இந்திய அணியிடம் 47 ஓட்டங்களால் தோற்ற போதிலும் பலமிக்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்து சுப்பர் 8 இன் புள்ளிக்கணக்கை ஆரம்பித்தது. இந்நிலையில் சுப்பர் 8 இன் இறுதி லீக் ஆட்டத்தில் இன்றைய தினம் பங்களாதேஷ் அணியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாக இப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அதற்கமைய தீர்க்கமான போட்டியில் நவீன் உல் ஹம் மற்றும் ரஷீட்கான் ஆகியோரின் அசத்தல் பந்துவீச்சால் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் முறையாக ரி20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிக்குள் கால் பதித்தது. இந்த வரலாற்று நிகழ்வை ஆப்கானிஸ்தான் மக்கள் வீதிக்கு இறங்கி கொண்டாடி வருகின்றனர். எல்லா மாநிலங்களிலுமுள்ள மக்கள் ஒன்று கூடி தமது மகிழ்ச்சி ஆரவாரங்களை செய்து வருவதுடன், தமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து மழையினைப் பொழிந்து வருகின்றனர்.

இதனிடையே வெற்றி குறித்தும் , அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றமை குறித்தும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட்கான் குறிப்பிடுகையில் ”எங்களை அரையிறுதி கணிப்பில் சேர்த்த ஒருவர் பிரையன் லாரா மட்டுமே, அதை நாங்கள் சரியென நிரூபித்தோம். வரவேற்பு விருந்தில் போட்டிக்கு முன், நாங்கள் அதைச் செய்து, நீங்கள் சொல்வது சரி என்பதை நிரூபிப்போம் என்று லாராவிடம் தெரிவித்தேன். எங்களைப் போன்ற அணிகளுக்கு அரையிறுதி என்பது பெரிய கனவு. நியூஸிலாந்து அணியை வீழ்த்திய போது எங்களாலும் முடியுமென்ற நம்பிக்கை அதிகரித்தது. இந்த தருனத்தை வார்த்தைகளால் விரிக்க முடியாது.” என்றார்.

மேலும் ஆப்கானிஸ்தான் அணி முதல் அரையிறுதிப் போட்டியில் இத் தொடரில் எந்த வித தோல்விகளையும் சந்திக்காக தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு ட்ரடினாட்டிலுள்ள பிரைன் லாரா மைதானத்தில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *