விளையாட்டு

வங்கப் புலிகளை சுருட்டிய ஆப்கான் முதல் முறையாய் அரையிறுதிக்குள் நுழைய, ஏமாற்றத்துடன் நடையைக் கட்டியது ஆஸி.

9ஆவது ரி2 0 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இறுதி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் முறையாக ரி20 உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

நடைபெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்று முடிவில் 2ஆம் சுற்றறான சுப்பர் 8 சுற்றின் பெரும்பாலான போட்டிகளின் முடிவில் குழு 2 இல் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகியிருந்தன. இந்நிலையில் நேற்று இரவு இடம்பெற்று முடிந்த இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று குழு 1 இல் இருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் 2ஆவது அணியாக எது உள்நுழையும் என்பதை தீர்மாணிக்கும் போட்டியாக இன்று காலை 6 மணிக்கு இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியே தீர்மானிக்கும் என கூறப்பட்டிருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஆப்கான் அரையிறுதிக்குத் தெரிவாகும். மாறாக பங்களாதேஷ் அணி 60 இற்கும் அதிகமான ஓட்டங்களால் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் அரையிறுதியை உறுதி செய்யும். மேலும் பங்களாதேஷ் அணி சாதாரன வெற்றி பெற்றால் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெரும் என இருந்த நிலையில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதற்கமைய களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் ஜோடி மந்தமான ஆரம்பத்தைக் கொடுத்தது. இவ்விருவரும் 10.4 ஓவர்களில் 59 ஓட்டங்களை பெற்றிருக்க சத்ரான் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் 55 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்ற குர்பாஸும் ஆட்டமிழக்க மத்திய வரிசை வீரர்கள் நிலைக்காமல் போக பின்வரிசையில் வந்த அணித்தலைவரான ரஷீட்கான் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ரிஷாட் ஹுசைன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 116 என்ற வெற்றி இலக்கை 13.5 ஓவர்களில் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறலாம் என்ற நிலையில் பதிலுக்கு களம் நுழைந்த பங்களாதேஷ் அணிக்கு ஆரம்ப வீரரான லிட்டன் தாஸ் ஒரு புறம் நிலைத்திருந்து ஓட்டங்களை சேர்த்த மறுபக்கம் சீறான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. ஒரு கட்டத்தில் 81 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருக்க மழை குறுக்கிட்டது. இதனால் பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் வெற்றி இலக்காக 114ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் மிகுதி இருந்த விக்கெட்டுக்களும் விரைவாக பெவிலியன் திரும்ப நம்பிக்கை கொடுத்த லிட்டன் தாஸ் அரச்சதம் கடந்து 54 ஓட்டங்களுடன் நிலைத்திருக்க 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு நிறைவுக்கு வந்தது பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸ். இதனால் 8 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதல் முறையாக ரி20 உலகக்கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது. பந்துவீச்சில் ரஷீட்கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினர்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *