உள்நாடு

மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் வரலாறு படைத்த கல்பிட்டி அல் அக்ஸாவின் மாணவர்கள்; 8 பேர் மாகாண மட்டத்திற்குத் தகுதி

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 8 மாணவ மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிகியுள்ளனர்.

கல்வி அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை பாடசாலை விளையாட்டு சபையுடன் இணைந்து இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடாத்தியிருந்த புத்தள வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி கடந்த 22 மற்றும் 23ஆம் திகதிகளில் புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றிருந்தது. இதில் 7 வயதுப் பிரிவு, 9,11,13,15,17 ஆகிய வயதுப் பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளாக இப் போட்டிகள் இடம்பெற்றன.

இதில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்து 7 வயதுப் பிரிவில் ஒருவரும், 9 வயதுப் பிரிவு ஆண்களுக்கான போட்டிக்கு 4 மாணவர்களும், பெண்கள் பிரிவில் ஒருவரும் பங்கேற்றனர். மேலும் 11 வயது ஆண்கள் பிரிவில் 10 மாணவர்களும், பெண்கள் பிரிவில் ஒருவரும், 13 வயதுப் ஆண்கள் பிரிவில் மூவரும், 15 வயது ஆண்கள் பிரிவில் 7 பேரும், பெண்கள் பிரிவில் ஒருவரும் பங்கேற்றனர். அத்துடன் 17 வயது ஆண்கள் பிரிவில் நால்வரும், பெண்கள் பிரிவில் இருவருமாக மொத்தம் 35 மாணவ மாணவியர் இப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இதில் 13 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆத்திப் தகுதி பெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவானார். பின்னர் இடம்பெற்ற 15 வயதுக்குற்பட்ட பெண்கள் பிரிவில் எம்.எஸ்.எப். சபீஹா 2ஆம் இடம்பெற்று மாகாணமட்டப் போட்டிக்குத் தெரிவானார். அடுத்து 15 வயதுக்குற்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆதில் ஹசன் மற்றும் எம்.எம். மயிஸ் அஹமட் ஆகியோர் அடுத்த மட்டப் போட்டியின் கால்பதிக்கள்ளனர்.

மேலும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 3ஆம் இடம்பெற்ற எம்.ஆர். ஆயிஷா மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன், அதே வயதெல்லையின் ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆஷிப் 2ஆம் இடத்தையும், எஸ்.டி. இத்தர்ஷனன் 3ஆம் இடத்தையும், எம்.எஸ்.எம். சியாப் தகுதியைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகி அசத்தினர்.

அதற்கமைய கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்ற 35 மாணவ மாணவிகளில் 8 பேர் மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவானமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், இம் மாணவர்கள் தேசியம் வரை பாடசாலையின் பெயரை கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப். சாஜினாஸ் தெரிவித்திருந்தார். இப் போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்றைய தினம் (25) பாடசாலையில் காலைக் கூட்ட நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன் , ரிஸ்வி ஹுசைன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *