உள்நாடு

ஹாஜிகளுக்கு சிறந்த பலன் தரும் சவூதியின் புதிய டிஜிட்டல் திட்டம்; – சவூதிக்கான தூதுவர் அமீர் அஜ்வத்

ஹஜ் சேவைகளை வழங்குவதில் சவூதி அரேபியாவின் புதிய டிஜிட்டல் உட் கட்டமைப்பு ஹாஜிகளுக்கு சிறந்த பயன்மிக்கது என சவூதிக்கான – இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு “நுசுக்” எனும் இனணயத்தளம் இலகுவான மிகச் சிறந்த சேவையை வழங்குகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “கிதாமுஹு மிஸ்க்” 2024 ஹஜ் நிறைவு விழாவில் கலந்து கொண்டு – சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் சிறப்புரையாற்றும் போதே மேற்படி கருத்தை முன்வைத்தார்.

2024 ஹஜ் வெற்றிகரமாக நிறைவுற்றதைக் கொண்டாடும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு “விருதுகள்” வழங்கப்பட்டன.

2025 ஹஜ் காலத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் கால அட்டவணையை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தௌபீக் அல்-ரபியா அறிவித்தார். உம்ரா மற்றும் ஹஜ் செய்வோருக்கான சேவைகளை மேம்படுத்த “நுசுக் மசார்” என்ற புதிய தளத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இத்தளம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சேவை செய்யும் அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்து திறமையான அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டிற்கு உதவும் வகையில் முன்கூட்டியே யாத்திரை ஒதுக்கீடுகளை வழங்கும் பூர்வாங்க ஏற்பாடுகள் பற்றிய ஆவணமும் இங்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது மேலும் கருத்துத் தெரிவித்த சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் – இரண்டு புனித தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்து பின் சல்மான் ஆகியோருக்கு ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்தசேவைகளை வழங்கியமைக்காக இலங்கை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“நுசுக்” எனும் இனணயதளம் இலகுவான மிகச் சிறந்த சேவையை வழங்குகிறது. இது சவூதி அரேபியாவின் – 2030 இலக்குகளுடன் இணைந்து செல்லும் ஒரு புரட்சிகர டிஜிட்டல் பரிமாற்றம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் அன்சார் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்களான இபாஸ் நபுஹான், நிப்ராஸ் நசீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *