அகவை 70இல் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி.
இலங்கை வாழ் முஸ்லிம்களது ஆத்மீக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆற்றி வரும் பங்களிப்புகள் அளப்பரியது. சுதந்திரத்திற்கு பின் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இஸ்லாம் பற்றிய தெளிவான அறிவை வழங்குவதில் பிரதான ஆத்மீக இயக்கங்கள் ஒன்றுக்கொன்று குறையாத பங்களிப்பினை செய்துள்ளது. அகவை 70ல் கால் பதித்துள்ள இலங்கை ஜமாஅத்தை இஸ்லாமியின் பயணத்தை பின்னோக்கிப் பார்க்கும்போது நாட்டு முஸ்லிம்களுக்கு சரியான இஸ்லாமிய வழிகாட்டல்களையும், தெளிவினை வழங்குவதனையும் ஒரு சிறப்பான பங்களிப்பினை செய்துள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏழு தசாப்த பயணத்தில் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு இன்று சகல சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக நாட்டின் ஏனைய இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை பற்றியும் இஸ்லாம் பற்றியும் நிலவும் தப்பபிப்பிராயங்களை போக்குவதில் ஒரு சிறப்பான பங்களிப்பினை ஜமாத்தே இஸ்லாமி செய்து வருகின்றது. விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் அதன் வெளியீடுகள் ஊடாக இந்தப் பணிகளை சிறப்பாக செய்துள்ளது, செய்தும் வருகின்றது.
ஜமாத்தே இஸ்லாமி சமூக மேம்பாட்டுக்காக முன்வைக்கும் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம் அல்லாதவரையும் கவர்வதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சமூகங்களுடைய நல்லிணக்கம், பரஸ்பரம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதில் இந்த அமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பினை விசேடமாக குறிப்பிட முடியும். முஸ்லிம் சமூகம் முழுமையாக நிராகரித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்த அமைப்பு சில பின்னடைவுகளை எதிர்நோக்கியபோதும் தமது செயல்பாடுகளை இன்று அந்த நிலையில் இருந்து மீட்சி பெற்று அதன் வழமையான பயணத்தில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த தெளிவை நாட்டுக்கு வழங்குவதற்கு ஜமாஅத்தின் தலைவர்களும் தொண்டர்களும் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது.
சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என்பன மேம்பட வேண்டும் என்ற சிந்தனையை ஜமாஅத்தே இஸ்லாமி முன்வைத்துள்ளது. அதற்கான செயற்திட்டங்களையும் முன்வைத்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரிய வழியாகும். முஸ்லிம் சமூகத்தின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாறு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊடகங்களை வெளியிட்டு சமூகத்தின் ஊடகத்தாகத்தை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்புச் செய்து வருகின்றது. துரதிஷ்டவசமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அதன் பல வெளியீடுகள் இடைநிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டது.
ஜமாஅத்தே இஸ்லாமி மட்டுமின்றி நாட்டின் பல தசாப்தங்களாக வெளியான ஊடகங்கள் கூட இடைநிறுத்தப்பட்டது சமூகத்தின் துரதிஷ்டமே. நாட்டுக்கும் சமூகத்துக்கும் பல பணிகளை சிறப்பாக செய்து வரும் இந்த ஜமாஅத்தே இஸ்லாமி அதன் அகவை 70இனை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி அதன் அங்கத்துவ மகாநாட்டை பண்டாரநாயக்க சர்வதேச மகாநட்டு மண்டபத்தில் சிறப்பாக நடத்த உள்ளது. 1500க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட பிரமுகர்களுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.