விளையாட்டு

போராடி வென்ற தென்னாபிரிக்கா அரையிறுதியில்; தோற்றுப் போன மே.இ.தீவுகள் தொடரிலிருந்து வெளியேறியது.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் குழு 2 இன் இறுதி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை டக்வேர்த் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி அரையிறுதியை உறுதி செய்ய, தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றுக்கள் முடிவில் சுப்பர் 8 சுற்றும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றது. அந்தவகையில் குழு 2 இல் இங்கிலாந்து அணி ஏற்கனவே முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் குழு 2 இல் இருந்து மற்றைய அணியை தேர்வு செய்வதற்கான போட்டியாக தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் சேர் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் மோதிய போட்டி அமையப்பெற்றிருந்தது. இலங்கை நேரப்படி இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமான போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் முதல் இரு விக்கெட்டுக்களையும் 5 ஓட்டங்களுக்குள் இழந்து தடுமாறியிருக்க 3ஆது விக்கெட்டில் இணைந்த கைல் மெய்ர்ஸ் மற்றும் ரோஸ்டன் சோர்ஸ் ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருக்க மெய்ர்ஸ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றைய வீரரான ரோஸ்டன் சோர்ஸ் அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மத்திய வரிசை மற்றும் பின்ரிசை துடுப்பாட்ட வீரர்கள் நிலைக்காமல் சம்ஷியின் சுழலில் வெளியேற மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தப்ரெய்ஸ் சம்ஷி 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் சவால்மிக்க 136 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப வீரர்களான டி கொக் மற்றும் ரீஷா ஹென்றிக்ஸ் ஆகிய இருவரும் 2ஆது ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருக்க ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இந்நிலையில் கடும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சில மணித்தியாலங்கள் தாமதம் அடைய டக்வேவர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணிக்கு 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் இலக்காக வழங்கப்பட்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு மத்திய வரிசையில் வந்த ஸ்டெப்ஸ் 29 ஓட்டங்களையும், ஹென்றிக் க்ளாஸன் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இறுதியில் வந்த மார்கோ ஜென்சென் இறுதி ஓவருக்கு 5 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவையாய் இருக்க முதல் பந்திலேயே 6 ஓட்டத்தை விளாச, தென்னாபிரிக்க அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குழு 2 இல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜென்சென் 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சேர்ஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இப்போட்டியில் போராடித் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி சுப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றி இரு தோல்வியுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்த தென்னாபிரிக்க அணி, குழு 1 இல் 2ஆம் இடம் பெரும் அணியை அரையிறுதியில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *