கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா கிழக்கு மாகாண முதன்மை வெற்றியாளராக தெரிவு ..!
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) 2024ம் ஆண்டிற்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா மாகாண ரீதியாக பாடசாலை பிரிவில் கிழக்கு மாகாணத்தில் வெற்றிஈட்டியுள்ளார்.
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் புதன்கிழமை (19)ம் திகதி இடம்பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்குமான புத்தாக்க சிந்தனைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 10ல் கல்வி கற்கும் சாய்ந்தமருதினைச் சேர்ந்த ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட பாடசாலை காபன் தட கணிப்பீடு செயலிக்காக (School Carbon Footprint) இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.
வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பினை செய்து வரும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு புத்தாக்க சிந்தனையாளர்களுக்காக ஆறாவது தடவையாக இவ்வருடம் இவ்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த இம்மாணவி இக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜ.எல்.ஏ. மஜீத் அவர்களின் புதல்வரான தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் அஸ்ரப் ஹஸ்னா செர்பின் ஆகியோரின் மூத்த புதல்வியாவார். இவர் 2023இல் நடந்த போட்டியில் தொழில்நுட்ப சிறார்கள் பிரிவில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியின் மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவி நதாவினை கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் , பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த
பாராட்டியுள்ளனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)