அதிபர் என்.எம்.எம். நஜீபிற்கு சேவை நலன் பாராட்டு விழா
புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் 20 ஆம் திகதி ஓய்வு பெறுவதையிட்டு அதிபருக்கான சேவை நலன் பாராட்டு விழா (20) பாடசாலை வளாகத்தில் பதில் அதிபர் ஹுதைபா தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை உருவாக்கக் குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா, விஷேட அதிதியாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் ஆகியோரோடு புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.அருஜுனா, புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுஜீவிகா சந்திரசேகர, ஆசிரியர் பிரிவுக்கான கல்விப் பணிப்பாளர் காந்தி லதா ஆகியோரோடு ஏராளமான பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரை, சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலையின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியாவினால் அவரது எஹியா பௌண்டேஷன் ஊடாக புனித உம்ரா செய்வதற்கான நிதியினை வழங்கி வைத்து, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.
அதே போன்று புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர், புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை உருவாக்கக் குழு ஏற்பாட்டில் அதிபரின் சேவையைப் பாராட்டி CT100 மோட்டார் சைக்கிள் ஒன்றை அன்பளிப்பு செய்தனர். இதேவேளை புத்தளம் – தெற்கு கோட்டத்துக்குட்பட்ட அதிபர்கள் சங்கத்தினால் ஓய்வு பெரும் அதிபரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் ஓய்வு பெறும் என்.எம்.எம். நஜீப் அதிபரின் அதிபர், நடராஜா வருகை தந்து தனது மாணவனை பொன்னாடை போர்த்தி வாழ்திய அதேவேளை நஜீப் அதிபர் தனது அதிபரான திரு. நடராஜா அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, ஏராளமான பெற்றோர்கள், நலன் விரும்பிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)