இம்முறை ஹஜ் யாத்திரையில் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – கடும் வெப்பமே உயிரிழப்புக்குக் காரணமென தெரிவிப்பு.
இந்த வருட ஹஜ் யாத்திரையில் 68 இந்தியர்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா – மக்காவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஹஜ் யாத்திரையின் போது, நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் உயிரிழந்த துயர சம்பவத்தில் பல இந்தியர்களும் அடங்குகின்றனர். கடும் வெப்பமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு தூதுவர் 68 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினார். இதில் சிலர் இயற்கை காரணங்களால், குறிப்பாக யாத்திரிகர்கள் சிலர் வயது காரணமாகவும், மற்றவர்கள் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டும் இறந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவலுக்கு முன்னதாக, 550 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. எகிப்து மற்றும் ஜோர்டானில் இருந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு, கடும் வெப்பமே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால், உயிரிழப்புக்களுக்கான சரியான காரணங்கள் எதுவும் வெளியிடப் படுவதில்லை. தற்போதைய தகவல்களின்படி, மொத்தம் 645 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவூதி அரேபியா உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைகளை வழங்கவில்லை. என்றாலும், ஒரு நாளில் மட்டும் 2,700 க்கும் மேற்பட்டோர் வெப்ப சோர்வால் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சில இந்திய யாத்திரிகர்கள் காணாமல் போயிருப்பதாகவும், ஆனால் அவர்களின் துல்லியமான எண்ணிக்கைகள் கிடைக்கவில்லை என்றும் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )