9ஆவது ரி20 உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்று. தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இலகு வெற்றி
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி அமெரிக்க அணியையும், இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் வீழ்த்தின.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுக்கள் முடிவில் சுப்பர் 8 சுற்றான 2ஆவது சுற்று ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் போட்டியாக இலங்கை நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி அமெரிக்க அணியை எதிர்கொண்டிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்ப வீரரான குயின்டன் டி கொக் 74 ஓட்டங்களையும், அணித்தலைவரான எடன் மாக்ரம் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நட்ரவால்கர் மற்றும் ஹர்மீட் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் 195 என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த அமெரிக்க அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அண்டிஸ் ஹோவ்ஸ் நிலைத்திருந்து ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதிலும் அமெரிக்க அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பின்னர் இலங்கை நேரப்படி இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமான குழு ஒன்றுக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வழங்கியிருந்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஜோன்ஸன் சார்லஸ் 38 ஓட்டங்களையும், நிக்கலஸ் பூரான் மற்றும் பவல் ஆகியோர் தலா 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மெயின் அலி,லிவிங்ஸ்டன் , ஆதில் ரஷிட் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
பின்னர் 181 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான பட்லர் மற்றும் பில் சோல்ட் ஆகியோர் 67 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொடுத்தனர். இதனால் சவால்மிக்க வெற்றி இலக்கை இலகுவாக 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. துடுப்பாட்டத்தில் பில் சோல்ட் மற்றும் ஜோனி பெயஸ்டோ ஆகியோர் 87 மற்றும் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ரஸல் மற்றும் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
(அரபாத் பஹர்தீன்)