எமது அரசாங்கத்தில் எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளியோம்.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். ஒரு நாடாக நாம் ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதன் மதத் தலைவர்களையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். நிந்தனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாடாக எம்மால் முன்னேற முடியாது. சிங்களம், முஸ்லிம், தமிழ் பர்கர்களாக சிந்திக்காமல் “இலங்கையர்” என்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் புதிய தாயகத்தை உருவாக்க ஒன்று சேருங்கள். ஒன்றுபட்ட வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 241 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், குளியாபிட்டிய, சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அரசியல் தலைவர்களும் சாதி, மத, குலம், வர்க்க வேறுபாடின்றி நடந்து கொள்வோம் என்று பெரிதாக பேசினாலும், இந்நாட்டில் இனவாதம் உச்சத்தில் இருக்கும் போது மக்களுக்காக முன்நிற்க இவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக நாமே முன்வந்து செயற்பட்டோம்.
கொரோனா கோவிட் காலகட்டத்தில் தகனமா அல்லது அடக்கமா என்ற சிக்கல் எழுந்தபோது, நீதி மற்றும் மனித உரிமைகளின் பொருட்டு எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக, கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்காக குரல் எழுப்பியது. ஏனைய தரப்பினர் உண்மையின் பக்கம் நிற்க அஞ்சினாலும், ஐக்கிய மக்கள் சக்தி உண்மைக்காக முன்னின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 220 இலட்சம் பேரும் ஒன்றாக நிற்கும் நேரம் வந்துவிட்டது.
சாதி, குலம், வர்க்கம், கட்சி, மதம், இனம் போன்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக இருப்பதுதான் நாட்டின் பலம். வங்குரோத்தடைந்த நாட்டில், மக்கள் வாழ்வு பாதிப்பைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், சகோதரத்துவத்துடனும், நட்புடனும் ஒரே குடும்பத்தில் ஒரு தாயின் பிள்ளைகளாக, நாமனைவரும் ஒன்றிணைந்து 220 இலட்சம் பேரும் ஒன்றாக நிற்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. இந்த 220 இலட்சம் பேரும் ஒவ்வொருவரினதும் மதம் மற்றும் கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்வதோடு, அதற்கு இடமும் கொடுத்துச் செயற்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம், இந்நாட்டு மக்கள் அனைவரும் சம அந்தஸ்துள்ளவர்களாவர். இது நடைமுறையில் நிகழ வேண்டும். கல்வியில் பழமைவாத மற்றும் காலாவதியான போக்குகளை நீக்கி, கல்வியினாலும் புத்திசாலித்தனத்தினாலும், அறிவு எனும் ஆயுதம் ஏந்தி அனைத்து குறுகிய வேறுபாடுகளையும் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.