மிஹிந்தலை புதிய ரயில் போக்குவரத்து பாதை திறந்து வைப்பு..!
இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை,மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை ரயில் பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 15 கிலோ மீட்டர் கொண்ட இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும்.
மிஹிந்தலை ரயில் நிலையம், மிஹிந்தலை சந்தி ,துணை நிலையம், சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் இந்த ரயில் பாதையில் அடங்கும்.
மஹவ ஓமந்த திட்டத்தின் நான்கு கட்டங்களின் கீழ், இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாதையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரயில் பாதை 1.8 கிலோமீற்றர் எனவும், அதற்காக செலவிடப்பட்ட தொகை 220 மில்லியன் ரூபாவாகும்.
இத்திட்டத்திற்காக இதுவரையில் ரயில்வே திணைக்களம் 430 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் ரயில் பாதை திறப்பு விழாவுடன் அநுராதபுரம் உதவி வர்த்தக ஆணையாளர் அலுவலகம் திறப்பு விழாவும், அமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அநுராதபுரம் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் விசேட நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த அமைச்சர் மற்றும் அதிதிகள் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையிலான புதிய ரயில் பாதையின் அங்குரார்ப்பண பயணத்தில் இணைந்துகொண்டனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே, முன்னாள் அமைச்சர் எச்.பி சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் சமரகோன், ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச அரச உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)