உலகம்

தீ விபத்தில் பலியானோருக்கு 15.000 அ.டொலரை இழப்பீடாக வழங்கும் குவைத் அரசு.

குவைத் நாட்டில் கடந்த 12ஆம் திகதி தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் உயிரிழந்தனர். பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார்12.50 இலட்சம் இந்திய ரூபா) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *