கற்பிட்டியில் வெகு விமர்சையாக இடம்பெற்ற பாரம்பரிய ஹஜ் விழா
கற்பிட்டி சீ லையன்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழாவும் மாபெரும் படகு ஓட்டப் போட்டியும் செவ்வாய்க்கிழமை (18) கற்பிட்டி வன்னிமுந்தல் கடற்கரையில் சீ லையன்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.எம் அன்பாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டியின் பொலிஸ் அத்தியட்சகர் எஸ் என் சொயிஷா , கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்யூ.எஸ் எதிரிசிங்க கற்பிட்டி விஜயா கடற்படை முகாம் உத்தியோகத்தர் ரத்நாயக்க மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கற்பிட்டியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழாவின் போட்டி நிகழ்ச்சிகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை சகலரும் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு வெற்றி பெற்று பெறுமதியான பரிசுப் பொருட்களையும் , பணப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.
அத்தோடு சுமார் 10 ற்கும் மேற்பட்ட எஞ்சின் வலுக்களை கொண்ட படகு ஓட்டப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததுடன் போட்டிகளை பார்வை இடுவதற்கு பெருந்திரளான பார்வையாளர்கள் சமூகமளித்திருந்தனர். புத்தளம் மாவட்டத்திற்கு வெளியில் இருந்தும் பல படகுகள் கற்பிட்டியில் இடம்பெற்ற படகு போட்டிக்கு வந்திருந்ததையும் காணமுடிந்தது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)