தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை – தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டு
இலங்கைச் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என, தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எவ்வித வரியும் அதிகரிக்கப்படவில்லை என, சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் வரை 42 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பாகும் என பேராசிரியர் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நுகர்வோருக்குப் போதுமான தேங்காய் எண்ணெய் கையிருப்பில் உள்ளதால், தேங்காய் எண்ணெய்யின் விலையை உயர்த்துவதற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையைக் கட்டுப்படுத்த, புதிய ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த, தான் உத்தேசித்துள்ளதாகவும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )