ஹஜ் கிரியைகள் வெற்றிகரமாக நிறைவேற அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சவுதிக்கு உலக முஸ்லிம்கள் பாராட்டு
2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவுதி அரேபிய மன்னரும், இரு புனிதஸ்தலங்களின் காவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் உள்விவகார அமைச்சர் அமீர் அப்துல் அஸீஸ் பின் நாயிப், இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் மற்றும் அனைத்து சவுதி அரேபிய உயரதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கை ஹாஜிகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் சார்பில் கொழும்பு அல் ஹிக்மா நிறுவனம் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுமார் இரண்டரை மில்லியன் மக்களை ஒரே இடத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் ஒன்று சேர்ப்பதும், அவர்களுடைய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதும், குறிப்பாக நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும், மருத்துவம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் அதிநவீன முறையில் செய்து கொடுப்பதும் இலகுவான காரியமல்ல. இதற்கென பாரிய திட்டமிடலும் விசாலமான ஏற்பாடுகளும் மிகவும் இன்றியமையாததாகும்.
அந்த வகையில் இவ்வருட ஹஜ் கிரியைகளுக்கான அனைத்து திட்டமிடல்களும் ஏற்பாடுகளும் நிர்வாக செயற்பாடுகளும் கடந்த வருடம் ஹஜ் கிரியைகள் நிறைவுற்றதும் ஆரம்பிக்கப்பட்டுவிடும். இது தான் சவுதி அரேபியா தொன்று தொட்டு முன்னெடுத்துவரும் வழக்கமாகும்.
இதன் நிமித்தம் மன்னரும், பட்டத்து இளவரசரும் தேவையான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல்கள், ஆலோசனை, அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அதற்கேற்ப சவுதி அரேபிய அமைச்சர்கள், உயரதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புகளுடன் பணியாற்றி வருகின்றனர். அதன் பயனாக எவ்வித குறைபாடுகளும் அற்ற வகையில் ஹஜ்ஜாஜிகள் தங்கள் ஹஜ், உம்றா கிரியைகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் இலட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற போதிலும் அவர்கள் தங்கள் கடமைகளை முழுமையான மனத்திருப்தியோடு மேற்கொள்வது நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். அதன் விளைவாக சவுதி அரேபியாவின் இந்த ஏற்பாடுகளும் வசதிகளும் உலக மக்கள் அனைவரதும் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
ஹாஜிகளுக்கு சேவை செய்வது எமக்கு மிகப் பெரும் கண்ணியம், கெளரவம் என்ற மனப்பான்மை சவுதி அரேபிய மன்னர்கள் உட்பட அந்நாட்டு சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரையான அனைத்து பிரஜைகளினதும் ஆழ் மனதில் அன்று தொட்டு பதிந்த ஒன்றாக இருந்து வருகிறது. அதனால் மன்னர், இளவரசர் உட்பட அனைவரும் ஹாஜிகளுக்கான சேவகர்களாகவே தங்களைக் கருதிக் கொள்கின்றனர். உண்மையில் இது எமக்கு பெருமையளிக்கிறது. இதை நன்குணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு ஹஜ்ஜாஜியும் சவுதி அரேபியாவுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவ்வாறான சூழலில் 2024 ஹஜ் வெற்றிகரமாக முடிந்துள்ளதை இட்டு சவுதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசர், உள்விவகார அமைச்சர் அனைவருக்கும் சவுதி அரசுக்கும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் உள்ளிட்ட நலன்புரி தொடர் அமைப்புகளும் விஷேடமாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் இலங்கை ஹாஜிகள் உள்ளிட்ட இரண்டரை மில்லியன் ஹாஜிகளும் தங்களது ஹஜ் கடமைகளை முழு மனத்திருப்தியோடு நிறைவேற்றி விட்டு தத்தம் நாடுகளுக்கு நிம்மதியாக திரும்பிச் செல்ல ஏற்பாடுகள், வசதிகளை செய்துள்ளமைக்கும் இக்கிரியையின் நிமித்தம் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாத வகையில் விசால ஏற்பாடுகளை செய்து கொடுத்து 2024 ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் சவுதி அரேபிய மன்னர், இளவரசர்ை உள்விவகார அமைச்சர, இஸ்லாமிய விவகார அமைச்சர் மற்றும் சவுதி அரசுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அல் ஹிக்மா நிறுவனம் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறது.
– மக்காவிலிருந்து
எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (BA)
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு