மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்க 69 இலட்சம் மக்களும் இன்று பிற்பகல் நுகேகொடைக்கு வாருங்கள் – விமல் வீரவங்ச மக்களுக்கு அழைப்பு
ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பஷில் ராஜபக்ஷவின் காட்டிக் கொடுப்பு வெற்றிபெறக் கூடாது. எனவே, 69 இலட்ச மக்களாணையைப் பலப்படுத்தும் வகையில், அனைத்து மக்களும் இன்று (18) செவ்வாய்க்கிழமை பிற்பகல், நுகேகொடையில் ஒன்றிணைய வேண்டும் என, சர்வஜன சக்தியின் பிரதிநிதிகளான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சன்ன ஜயசுமன, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்தனர்.
கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி காரியாலயத்தில் (17) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச இங்கு கருத்துத் தெரிவித்ததாவது,
2019 ஆம் ஆண்டு பெரும்பான்மையான மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அரச தலைவர் 69 இலட்ச மக்களாணைக்கும், அபிலாஷைகளுக்கும் முரணாகச் செயற்படும் போது, மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒரு தரப்பினர், தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மக்கள் போராட்டத்தின் அதிஷ்டலாபம் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்தது.
கோத்தாபய ராஜபக்ஷ 69 இலட்ச மக்களாணையை அவமதித்து விட்டு தப்பிச் சென்ற காரணத்தால், 69 இலட்ச மக்களின் அரசியல் அபிலாஷைகளை எம்மால் மறக்க முடியாது. ஏனெனில், 69 இலட்ச மக்களாணையைத் தோற்றுவிக்க நாங்கள் முன்னிலை வகித்தோம். இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 69 இலட்ச மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேபோல், ராஜபக்ஷர்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. 69 இலட்ச மக்களாணையைப் பாதுகாக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்கவுள்ளோம். 69 இலட்ச மக்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இன்று (18) பிற்பகல் நுகேகொடயில் இடம்பெறும் எமது கூட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள் என்றார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். இவர்கள் மூவரும் தனித்தனியாக போட்டியிடுவதைக் காட்டிலும் ‘தேசிய ஐக்கிய கூட்டணி’ என்ற பெயரில் ஒன்றாகப் போட்டியிடுவது சிறந்ததாக அமையும். ஏனெனில், இவர்கள் மூவரின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒருமித்த தன்மை காணப்படுகிறது.
இம்மூவரும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் உட்பட மேற்குலகத்தின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகிறார்கள்.இவர்களிடம் தேசியம் பற்றி எதிர்பார்க்க முடியாது. 69 இலட்ச மக்களாணையைக் காட்டிக் கொடுத்தவர்களிடமிருந்து மக்களாணையைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு. தேசியத்துக்காக அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.
தொழிலதிபர் திலித் ஜயவீர
தேசியத்துக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. ‘நாட்டுக்கு ஆதரவான அணி, நாட்டுக்கு எதிரான அணி’ என்ற இரு அணிகள் தோற்றம் பெற்றுள்ளன. நாங்கள் நாட்டுக்கு ஆதரவான அணியாக நின்று செயற்படுகிறோம். அதன் காரணமாகவே, அரசியல் கொள்கை வேறுபாடுகளைப் புறக்கணித்து, நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளோம்.
2019 ஆம் ஆண்டு, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். 2022 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ, மீண்டும் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளார். 69 இலட்ச மக்களாணையை இவர் தான் காட்டிக் கொடுத்தார். நாங்கள் தோற்றுவித்த மக்களாணையின் எதிர்பார்ப்பு இல்லாதொழியக் கூடாது. தேசியத்துக்காகவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
( ஐ. ஏ. காதிர் கான் )