உள்நாடு

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை எமது வாழ்விலும் முன்மாதிரியாக கொள்வோம் – புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எம். எஸ் தௌபீக் எம்.பி

புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற இன்றைய ஈகைத்திருநாளில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு எமது வாழ்விலும் அவற்றைக் கடைப்பிடித்தொழுக திடசங்கற்பம் பூணுவோம் என திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம் எஸ் தௌபீக் அவருடைய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இறைவனின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அன்பு மைந்தன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறு எமக்கு முக்கிய படிப்பினையாக அமைந்திருக்கிறது.

புனித ஹஜ் கடமை என்பது முஸ்லிம்களிடையே எவ்வித பேதமுமில்லை என்கிற மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துவதுடன் நமது தனிப்பட்ட அபிலாஷைகளை முற்றாக புறமொதுக்கி விட்டு இறைவனுக்கு அடிபணிதல் எனும் கொள்கையை மாத்திரம் கடைப்பிடிக்கின்ற இஸ்லாமியர்களாக, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

எமக்குள் பலமாக இருக்க வேண்டிய ஐக்கியத்தை தொலைத்து விட்டு, கருத்து முரண்பாடுகளினாலும் பிளவுகளினாலும் எமது நாட்டில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து, அல்லலுறுகின்ற எமது சகோதரர்களின் நிம்மதியான வாழ்வுக்காகவும் சில அரபு நாடுகளில் தமது சொந்த மண்ணிலேயே யுத்த கோரப்பிடிக்குள் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாரபட்சமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்ற எமது முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்காகவும் இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *