உள்நாடு

கல்லொழுவை கிராமத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டப்பணிகள் முன்னெடுப்பு – அமைப்பாளர் ஆசு மாரசிங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பு..!

மினுவாங்கொடை – கல்லொழுவை கிராமத்தில், தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டப்பணிகள் தொடர்பில் நன்றி தெரிவிக்கும் விசேட ஒன்றுகூடல், நேற்று (15) சனிக்கிழமை தொழிலதிபர் பளீல் ஹாஜியார் இல்லத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மினுவாங்கொடை கிளை முக்கியஸ்தர்களான மேல் மாகாண சபை வேட்பாளரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான எச்.எம். ரபாய்தீன், மாகாண சபை வேட்பாளரும் இளைஞர் காங்கிரஸ் செயலாளருமான எச்.எம். இம்தியாஸ் உள்ளிட்ட ஸ்ரீல.மு.கா. முக்கியஸ்தர்கள் குழு, பாராளுமன்ற விவகாரம் மற்றும் ஜனாதிபதி ஆலோசகரும் ஐ.தே.க. மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளருமான ஆசு மாரசிங்கவைச் சந்தித்து, கிராமத்தின் குறைபாடுகள் மற்றும் பிரதானமான அத்தியவசிய வேலைத்திட்டங்கள் மிக நீண்டகாலமாக ஸ்தம்பித நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துத் தருமாறும் அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் அரச தலைமைக் கொறடாவுமான பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து கிராமிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் இருவருக்கும் நன்றி உபகாரம் செய்யும் விசேட ஒன்று கூடல் நிகழ்வே, கல்லொழுவை கிராமத்தில் நேற்று நடந்தேறியது.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், மினுவாங்கொடை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எம். சுஹைதர் (ஸ்ரீல.பொ.பெ.), கல்லொழுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் ஐ.எம். ஹிதாயதுல்லாஹ், கல்லொழுவை ஐ.தே.க. முக்கியஸ்தர்களான எம். கப்பார் ஹாஜி, மாதம்பிட்டிகே சுரத் ரவீந்திர (ஆனந்த) ஆகியோர் உள்ளிட்ட மேலும் கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் நலன் விரும்பிகள் பலரும் கட்சி பேதங்களை மறந்து, இச்சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், கல்லொழுவை கிராமத்துக்குத் தேவையாக இருந்த தாய்சேய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ நிலையம் அத்துடன் கழிவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் டிரக்டர் வண்டியை கிராமத்திற்குப் பெற்றுத் தரல், சிதைவடைந்திருந்த பாதைகளைப் புனர் நிர்மாணம் செய்து தந்துள்ளமை மேலும், கிராமிய போக்குவரத்துக்குத் தேவையான பஸ் வண்டியை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தித் தரவுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
அமைப்பாளர் ஆசு மாரசிங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடாக இவ்வேலைத் திட்டங்களை மிக வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்தமைக்காக, கல்லொழுவை கிராமத்தில் இயங்கும் ஸ்ரீல.மு.கா., ஐ.தே.க., ஸ்ரீல.பொ.பெ. ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் ஆகியோர், கட்சி பேதங்களுக்கும் அப்பால் நின்று, தமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *