உள்நாடு

எனது அரசியல் பயணம் மக்கள் நலன் சார்ந்ததாகவே அமையும்..! – முஷாரப் எம்.பி

மக்கள் பல்வேறு தேவைகளுடன் தங்களது பிரதிநிகளை தெரிவு செய்து, பாராளுமன்றத்துக்கும் ஏனைய சபைகளுக்கும் அனுப்பிவிட்டு தாங்களது தேவைகள் நிறைவேறும் என்று இலவுகாத்த கிளியைப்போல் காத்துக்கொண்டிருகின்றபோது, இவர்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களது தேவைகளை நிறைவு செய்யாது தாங்கள் சார்ந்த கட்சிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலேயே காலத்தை கடத்துவதாகவும் அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டிருக்க தன்னால் முடியாது என காரைதீவு பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தெரிவித்தார்.
50 லட்சம் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப புனர்நிர்மான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, மாவடிப்பள்ளி பள்ளிவாசல்களின் தலைவர் வை.வி.ஏ. மனாப் தலைமையில் கலாச்சார மண்டப வளாகத்தில் 2024.06.14 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களின் இணைப்பாளர் ஏ.எம். அஷாம் மெளலவி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், தன்னை தாங்களது பிரதிநிதியாக மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியதன் பலனை மக்கள் அனுபவிக்கும் காலம் ஆரம்பித்துள்ளதாகவும் தன்னால் முடிந்தவரை மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய தன்னாலான அத்தனையையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும் ஜாஹீர் பௌண்டேசன் மற்றும் சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான ஏ.எம். ஜாஹீர், மாவிப்பள்ளிவாசல்களின் செயலாளர் ஏ.எம்.பௌமி மற்றும் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *