புனித மக்காவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நைஜீரிய யாத்திரிகர்
புனித ஹஜ்ஜுக் கடமைகளுக்காக புனித மக்கா சென்ற நைஜீரிய யாத்திரிகரான பெண் ஒருவர், ஹஜ் பருவத்தின் முதலாவது குழந்தையை, மக்காவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பெற்றெடுத்துள்ளார்.
“முஹம்மத்” என்று பெயரிடப்பட்ட இந்தக்குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணியாக இருந்த பெண், கடந்த புதன்கிழமை மக்கா “ஹெல்த் கிளஸ்டரின்” கீழ் உள்ள “ஹரம்” அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவசர மருத்துவர்கள் உடனடியாக கவனித்து, மகப்பேறு வார்ட்டுக்கு மாற்றினர். அங்கு அவருக்கு இயற்கையான முறையில் பிரசவம் நடந்தது. இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தை, குறை மாதமாக இருப்பதால், சிறப்புக் கவனிப்பு அளிக்கப்படுகிறது. மக்கா மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஹஜ்ஜின் போது யாத்திரிகர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க முழு திறனுடன் செயல்படுவதுடன், அவசர சிகிச்சைப் பிரசவ ஆதரவு மற்றும் விரிவான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பருவத்தில் ஏராளமான குழந்தைகள் பிரசவிக்கின்றன.
நைஜீரிய யாத்திரிகரான அப்பெண் மணி, பிரசவத்தின் போது மருத்துவ ஊழியர்களின் சிறப்பான கவனிப்புக்கு, தனது சிறப்பான நன்றியையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )