உள்நாடு

“ஏகத்துவத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் ஒழிவதற்கு ஒன்றுபடுவோம்” -அசாத் சாலி அவர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

புனித ஹஜ்ஜுப் பெருநாளை (ஈதுள் அழ்ஹா) கொண்டாடும் சகலரது வாழ்விலும் மகிழ்சி பொங்க பிரார்த்திப்பதாக, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இறைதூதர் இப்றாஹிம் நபியின் தியாகங்கள் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. சமுதாயக் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இலட்சியத்தில்தான் அவரது வாழ்க்கையும் இருந்தது. அன்னாரின் குடும்பத்தினர் செய்த அர்ப்பணிப்பும் இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களும் மனுக்குலத்தின் மறுமலர்ச்சிக்கே வித்திட்டது. எந்தக் கருமமானாலும் இறை திருப்திக்காகச் செய்தவர் அவர். இறைவனின் ஏவல்களை அடியொற்றி நடந்த அல்லாஹ்வின் நண்பர் (கலீலுல்லாஹ்) என்ற சிறப்புப் பெயரும் இவருக்குண்டு. ஐயாயிரம் வருடங்களைக் கடந்துள்ள இப்றாஹிம் நபியின் வழிகாட்டல்களை,  அணுவளவும் பிசகாமல் முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் திருப்தியை நாடியே.

சிறுபான்மை சமூகத்தினராக வாழும் நாம், குர்பான் கடமைகளில் ஏனைய மதத்தினர் மனம் புண்படாமல் நடந்துகொள்ள வேண்டும். போயா, பௌர்ணமி காலங்களில் மிகக் கவனமாகச் செயற்பட்டு, இஸ்லாத்தின் உன்னத இலட்சியத்தை ஏனைய சமூகத்தினருக்கு வெளிப்படுத்த வேண்டும். மிருகவதையாக பிறர் சிந்திக்குமளவுக்கு “குர்பான்” கடமைகளை பின்பற்றக் கூடாது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலட்சக்கணக்கில் செலவிட்டு புனித ஹஜ்ஜுக்கு சென்றுள்ள சகலரது ஹஜ்ஜையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்! முஸ்லிம்களின் சர்வதேச  மாநாடாகக் கருதப்படும் இந்த ஹஜ்ஜுக் கடமையில், நமது சமூகத்தின் ஒற்றுமை மீள நிலைநாட்டப்பட வேண்டும்.

ஏகத்துவத்தை அழிக்கப்புறப்பட்டுள்ள ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகள் தோல்வியுற நாம் பிரார்த்திப்போம். ஒற்றுமையும், பிரார்த்தனையுமே முஸ்லிம்களின் பலமாகும். நில ஆக்கிரமிப்பு போரில்காஸா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க, முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை ஐ.நா.வுக்கு அழுத்தமாக அமையட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

(ஊடகப்பிரிவு- மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *