“ஹைக்கூ பேரொளி விருது” பெற்றார் ஏறாவூர் கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் – மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் “ஹைக்கூ” மாநாட்டில் நடந்தேறிய சிறப்பு நிகழ்வு..!
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில், “தூரிகை வரையும் மின்மினிகள்” எனும் ஹைக்கூ நூலுக்காக, தமிழகத்தில் “ஹைக்கூ பேரொளி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மதுரை – உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், “இனிய நந்தவனம்” மாத இதழ் ஆகியன இணைந்து, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், மருத்துவர் தங்கராசு சாலையில்
அமைந்துள்ள பிரமாண்ட உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தின் “மித்ரா” அரங்கில், கடந்த (09.ஜூன்.2024) ஞாயிற்றுக்கிழமையன்று நடாத்திய “தமிழ் ஹைக்கூ : மூன்றாவது உலக மாநாடு” நிகழ்வின்போதே, இவ்வாறு கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் “ஹைக்கூ பேரொளி விருது” வழங்கி பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஜப்பானியக் கவிதை வடிவமான “ஹைக்கூ கவிதைகள்” பற்றிய புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்துவதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் ஹைக்கூ: உலக மாநாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது, தமிழ் ஹைக்கூவின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.
தமிழகத்திலிருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளிலிருந்தும் மாநாட்டின் பிரதிநிதிகளாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் 200 இற்கும் மேற்பட்ட “ஹைக்கூ கவிஞர்கள்” ஆர்வத்தோடு, இச்சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இலங்கையிலிருந்து சிறப்பு விருந்தினராகவும், விருதாளராகவும் கவிதாயினி வைத்தியர் ஜலீலா முஸம்மில் இம்மாநாட்டில் கலந்து கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
“மாநாட்டு தொடக்க விழா, ஹைக்கூ கண்காட்சி, தூண்டில் மாநாட்டுச் சிறப்பு மலர் வெளியீடு, ஹைக்கூ வாசிப்பரங்கங்கள், ஹைக்கூ அனுபவப் பகிர்வரங்கங்கள், ஹைக்கூ நூல்கள் வெளியீடு, ஹைக்கூ கவிதைப்போட்டி பரிசளிப்பு, அயலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கல், மாநாட்டு நிறைவு விழா” என, பல்வேறுபட்ட நிகழ்வுகளோடு, இவ்வினிய மாநாடு தொய்வின்றி விறுவிறுப்பாக நடந்தேறியிருப்பதும் பாராட்டத்தக்கது.
இலங்கையிலிருந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர், திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு, இவ்வினிய விழாவை ஆரம்பித்து வைத்த நிகழ்வும் வரவேற்கத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வில், “கவி முதுசமான ஓவியக் கவிஞர்” அமுத பாரதியோடு, விழா ஆலோசகரும் ஒருங்கிணைப்பாளருமான கவிஞர் மு. முருகேஷ், “இனிய நந்தவனம்” மாத இதழ் சந்திர சேகரன், “இனிய நந்தவனம்” மாத இதழ் ஆலோசகர் “ரொட்டோரியன் மேஜர் டோனர்” டாக்டர் கே. சீனிவாசன், கவிஞர் அமரன், கவிஞர் தங்கமூர்த்தி,
பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, எழுத்தாளர் உமர் பாரூக், கவிஞர் பச்சை பாலன், கவிஞர் இமாஜான் போன்ற பல்வேறு இலக்கியப் பிரபலங்கள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான்)