பலஸ்தீனுக்கு ஆதரவாக இஸ்ரேலின் தயாரிப்புகளை பெருநாள் கொண்டாட்டங்களில் தவிர்ப்போம்! – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினதும் தியாகங்களை நினைவு கூரும் வகையில் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் தியாகத்திருநாளாம் இப்புனித ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில் மேலும், இலங்கையில் இன்று நாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் இந்நாட்டு சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல உலகம் வாழ் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதனை நாம் எல்லோரும் அறிவோம்.
பலஸ்தீன பூமியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னமும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் அல்லற்பட்டுக் கொண்டு இஸ்ரேலிய கொடூரர்களினால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நாம் இன்று ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கையில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு யுத்த அவலங்களால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களில் கணிசமானவர்கள் இன்னமும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆறுதலாளிக்கும் வகையில் எமது பெருநாள் துஆக்களில் அவர்களையும் இணைத்து கொள்வோம்.
மட்டுமின்றி எமது பெருநாள் கொண்டாட்டங்களில் இஸ்ரேலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பெருந்தொகை உதவிகளை, ஆயுத பலங்களை வழங்கும் உணவகங்கள் மற்றும் பானங்களை தவிர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இஸ்ரேலின் நண்பர்களை பலஸ்தீனின் உறவுகளாக உள்ள நாம் வளர்க்க முன்வரக்கூடாது. மேற்கத்தைய உணவகங்கள், இஸ்ரேல் ஆதரவு தயாரிப்புக்கள், குளிர்பானங்களை பெருநாள் கொண்டாட்டங்களில் தவிப்பதுடன் அவற்றை நிரந்தரமாக புறக்கணிக்க செய்வதே பலஸ்தீனர்களுக்கு நாம் செய்யும் சிறிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாளில் நாட்டில் இனங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வும், நம்பிக்கையும், ஏற்படுவதற்கும், சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதற்கும், நீதியும் நேர்மையும் மிக்கதோர் அரசாங்கம் எதிர்காலத்திலும் அமைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். அதேபோல் உலகளாவிய ரீதியில் புனித தீனுல் இஸ்லாத்தின் எழுச்சி வெற்றிக்காகவும் உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் நல்வாழ்வுக்காகவும் நாமெல்லோரும் பிரார்த்திப்போமாக!. என்று தெரிவித்துள்ளார்.