உலகம்

தீ விபத்தில் 42 பேர் இந்தியர்கள் குவைத் அரசு அறிவிப்பு; அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்..!  குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!

குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரள அரசு அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.இதனிடையே, கேரளாவை சேர்ந்த 2 முக்கிய தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோரும் நிவாரண உதவி அளிக்க முன் வந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று யூசுப் அலியும், ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ரவி பிள்ளையும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்த இழப்பீடாக தலா ரூ.12 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில், இறந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜை உடனடியாக குவைத்துக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதை மேற்பார்வை செய்யவும், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுக்கவும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றுள்ளார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *