உலகம்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 11.42 கோடியில் 198 வீடுகளை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக வீடுகள் கட்டும் பணியை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 978 குடும்பத்தினா் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக 198 வீடுகள் ரூ.11.42 கோடி மதிப்பீட்டில் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் த.பிரபு சங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் வீடுகள் கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஏற்கெனவே இந்த முகாமில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 98 தொகுப்பு வீடுகள் தரமற்ற காரணத்தால் முகாம் மக்கள் பயன்படுத்த இயலாத சூழல் வந்ததை அவா்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதையடுத்து ரூ. 11.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 198 வீடுகள் தரமான முறையில் கட்டப்படும் எனவும், அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும், 198 வீடுகளையும் 9 மாதங்களுக்குள் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், அமிழ்தமன்னன், பெத்திக்குப்பம் ஊராட்சித் தலைவா் ஜீவா செல்வம், ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சித் தலைவா் பிரபு உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா், எளாவூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, தலா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 48 வீடுகள் கட்டுமான பணியையும் ஆய்வு செய்தாா். அப்போது ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் செந்தில்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பரணி, உதவித் திட்ட அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் மறுவாழ்வுத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில், அங்குள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா்.

இம்முகாமில் உள்ள 32 குடியிருப்புகளில் 18 குடும்பங்களைச் சோ்ந்த 66 போ் வசிக்கின்றனா். இங்குள்ள 8 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை என அங்குள்ளோா் புகாா் அளித்தனா். இதனையடுத்து, மின்வாரியத்தை தொடா்பு கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக மின்சார வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டாா்.

அந்த மக்களுக்குத் தேவையான குடிநீா், கழிவறை, மின்சாரம், கழிவுநீா் கால்வாய் வசதிகள் உள்ளதா என்பதை பாா்வையிட்டாா். இருப்பினும், மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி தனிநபா் கழிப்பிடம் தேவைப்படுவோருக்கு இட வசதிக்கு ஏற்ப கட்டித்தரவும், மேல்நிலை அல்லது கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா், அவா்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டாா். இந்த ஆய்வின்போது துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

(திருச்சி – எம்.கே. ஷாகுல் ஹமீது)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *