விளையாட்டு

9ஆது ரி20 உலகக்கிண்ணம். முதன் முறையாய் முதல் சுற்றுடன் தாயகம் திரும்பும் வனிந்து தலைமையிலான இலங்கை அணி.

9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறும் முதல் சந்தர்பபமாகவும் பதிவாகியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9 ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றி|ருக்க ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் 4 குழுக்கள் இத் தொடரில் முதல் சுற்றில் பங்கெடுத்துள்ளன. அதற்கமைய 2ஆம் சுற்று ஆட்டத்திற்கு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களைப் பெரும் அணிகள் தகுதி பெறும் வண்ணம் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை அணி முதல் சுற்றில் குழு டீ இல் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம்பிடித்திருந்தன. இதில் இலங்கை அணி கடந்த 3ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

பின்னர் கடந்த 8ஆம் திகதி டலஸ்ஸில் இலங்கை அணி 2ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியிலும் இலங்கையின் துடுப்பாட்ட நட்சத்திரங்கள் சொதப்பலான ஆட்டத்தை தொடர 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் பதிலளித்த பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கினை எட்டி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற இலங்கை அணி 2ஆது தோல்வியை பதிவு செய்து சுப்பர் 8 வாய்ப்பை கேள்விக்குறியாக்கியது.

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதாக இருந்தால் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டும் என்ற நிலையுடன் கடந்த 12ஆம் திகதி இடம்பெறவிருந்த போட்டி மழையால் முழுமையாய் கழுவப்பட இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கை அணி தமது புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது.

மேலும் குழு டீ இல் உள்ள மற்றைய அணிகளில் தென்னாபிரிக்கா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவாக , பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க நேபாளம் அணி 1 புள்ளியுடன் ஓட்ட சராசரியில் 4ஆவது இடத்தில் காணப்பட இலங்கை அணி 5ஆது இடத்தில் இடம்பிடித்தது.

இந்நிலையில் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுதாக இருந்தால் நேற்றைய பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறாமலும்இ இலங்கை , நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இறுதி லீக் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை இலங்கை பெயவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை உண்டாகியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று அதில் பங்களாதேஷ் வெற்றியும் பெற்றுக் கொள்ள இலங்கை அணியின் அடுத்த சுற்று மற்றும் உலக்கிண்ண சம்பியன் கனவு என அனைத்தும் கலைந்து போனது.

இந்நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளதுடன் அப்போட்டி நிறைவடைந்தவுடன் இலங்கை அணி நாடு திரும்பள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ரி20 சம்பியன் மகுடத்தை இலங்கை வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை இன்னும் இரு வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *