உள்நாடு

23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொள்கலன்கள் துருப்பிடித்த நிலையில்!

IFAD செயற்திட்டத்தின் கீழ் காத்தான்குடி மீனவர்களின் நன்மை கருதி 2013 நவம்பர் மாதத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் 23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகிய கொள்கலன்கள் துருப்பிடித்து மீனவர்களுக்கு பயன்படாத வகையில் காணப்படுகிறது.

இவ் எரிபொருள் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் வரை மாத்திரம் இயங்கிய நிலையில் இன்றுவரை எவ்வித இயக்கமும் பராமரிப்பும் இன்றிக் காணப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல தடவை அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படாது இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜெய்லானி மீனவர் சங்கத்தின் தலைவர் கலீல் ரஹ்மான் இக் கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்ட இவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளுக்கு பல ஆயிரக்கணக்கான லீட்டர் டீசல் மற்றும் மண்ணெண்ணைகளை பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் இது துருப்பிடித்து இயங்காது இருப்பதால் நாங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம். இது தொடர்பில் பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்தும் கடல்லரிப்பு போன்ற பல்வேறு காரணங்களை கூறி கைவிடப்பட்டது என தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் றுக்ஸான்.க.குரூஸ் அவர்களிடம் வினாவிய போது கிடைக்கப்பெற்ற கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்காத காரணத்தினால் மீனவர்கள் தங்களுக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள பிரதேசங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்த அம் மீனவர்கள் துருப்பிடித்து சிதைவடைந்த காணப்படும் இவ் எரிபொருள் நிலையத்தை திருத்தம் செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தை புனர் நிர்மாணம் செய்வதன் ஊடாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன்பெற முடியும்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களம் மற்றும் அதிகாரிகள் கவனத்திற் கொண்டு இவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தை புனர் நிர்மானம் செய்து தருமாறு மீனவர்கள் வேண்டுகோள்  விடுகின்றனர்.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *