அழிந்தும்,சிதைந்தும், துருப்பிடித்தும் சோபை இழந்து காணப்படும் சாய்ந்தமருது கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்கா..!
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பொழுது போக்கு பூங்கா பல வருடங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு பொருத்தமில்லாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்றது.
பல இலட்சம் ரூபாய்க்களைக் கொண்டு கொட்டி எதற்கும் பிரயோசமில்லாத நிலையில் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட இக் கடற்கரைப் பூங்கா இதுவரைக்கும் ஒரு காட்சிப் பொருளாக காணப்படுகின்றது.
இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்தும் ,துருப்பிடித்தும் முறையான முகாமைத்துவம் இன்மையால் சிதைந்து போய் காணப்படுகின்றது. இங்கு பொருத்தப்பட்டுள்ள கொங்றீட் கதிரைகளினது நிலமையும் அவ்வாறே.
சாய்ந்தமருது மக்கள் தமது பொழுது போக்கிற்காக தமது பிள்ளைகளை பல கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட கடலரிப்பினால் இப் பூங்காவின் கிழக்குப்புற சுவர் அழிவடைந்தும் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அநுராதபுரம், மற்றும் பொலநறுவ போன்ற புராதன இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.சாய்ந்தமருது மற்றும் கல்முனை கடற்கரைப் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றாலே போதும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)