உள்நாடு

புத்தளத்தில் கட்டாக்காலி கழுதை மற்றும் மாடுகளால் தொல்லை

கற்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதான , உள் வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் கழுதைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக வாகன சாரதிகளும், பொதுமக்களும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரதான, உள்வீதிகளில் சுற்றித் திரிவது, படுத்துறங்குவது, வீதியில் நடுவே தரித்து நிற்பதனால் அவ்வீதியூடாக போக்குவரத்து செய்யும் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் வீதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட கண்டல்குழி தொடக்கம் கற்பிட்டி நகர் வரையிலான பிரதான வீதியில் கட்டாக்காலி கழுதைகள் நடமாடித் திரிவதால் வீதிப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் கழுதைகள் வீதியின் நடுவே தரித்து நிற்பதுடன், அங்கும் இங்குமாக ஓடித்திரிவதால் பல விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்துக்களால் உயிரிழப்புகள் மற்றும் வாகனங்களுக்கு சேதங்கள் என்பனவும் ஏற்பட்டுள்ளதாகவும் , சில சந்தர்ப்பங்களில் விபத்தால் கழுதைகள் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே கட்டாக்காலி மாடுகள் மற்றும் கழுதைகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேச சபைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *