பழைய மாணவர் கிரிக்கெட் தொடர்; சம்பியன் மகுடம் சூடியது 2018ஆம் ஆண்டு அணி
நுரைச்சோலை அரபா நகர் கொய்யாவாடி முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் 2007 ஆம் ஆண்டு அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்திய 2018 ஆம் ஆண்டு அணி நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தினைத் தனதாக்கிக் கொண்டது.
கொய்யாவாடி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பிரஜா பொலீஸ் அமைப்பு, பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர் குழாம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச் சுற்றுப் போட்டியின் மொத்தம் 16 வருட அணிகள் பங்கேற்றிருந்தன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெற்ற இப் போட்டித் தொடரில் 16 அணிகளும் 4 அணிகள் வீதம் 4 குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் ஆட்டங்களாக இடம்பெற்றன. பின்னர் ஒரு குழுவிலிருந்த முதலிடம் பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்று அதிலிருந்து 2 அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய குழு நிலை மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் இலகு வெற்றிகளைப் பதிவு செய்த 2007 ஆம் வருட அணியும், 2018 ஆம் வருட அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன. இதற்கமைய கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பித்த இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற 2018 ஆம் ஆண்டு அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பின்னர் 60 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த 2007 ஆம் ஆண்டு அணியினர் 5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமையால் 2018ஆம் ஆண்டு அணியினர் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தினைத் தனதாக்கி அசத்தினர். மேலும், இந்தத் தொடரின் மூலம் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலையில் கல்வி அபிவிருத்திக்காக சுமார் 2,11,000 ரூபாய்களை பாடசாலை அதிபரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன் , இனாமுல்லாஹ்)
(படஉதவி- ஊர் டிவி – கல்பிட்டி)