உள்நாடு

உயர் அதிகாரிகளின் முறைகேடான செயல்கள் காரணமாக HNDE ஆசிரியர் நியமனம் இழுத்தடிப்பு -ஓய்வு நிலை கல்விப்பணிப்பளர் ஏ.எல்.முகம்மட் முக்தார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு உயர் அதிகாரிகளின் முறைகேடான செயல்கள் காரணமாக HNDE ஆசிரியர் நியமனத்திற்காக கிழக்கு மாகாணத்தில் காத்திருக்கும் 301 பேர் பாதிகப்பட்டுள்ளதாக ஓய்வு நிலை கல்விப்பணிப்பளரும், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறு பாதிகப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்படி நியமனங்கள் யாவற்றையும் ஜுலை 02 ம் வாரத்திற்குள் வழங்குவது மிகவும் உசிதமானது. ஜுலை இரண்டாம் வாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான நியமனப்பத்திர நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள உள்ளமையால் இத்தினத்தின் பின்னர் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டு விடும். அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்பே எந்தவொரு நிருவாக நடவடிக்கையினையும் செய்ய முடியும்.

இந்நியமனத்திற்காக 230 தமிழ் மொழி மூல விண்ணப்பதாரிகளும் 71 சிங்கள மொழி மூல விண்ணப்பதாரிகளும் எழுத்துப் பரீட்சை, நேர்முக பரீட்சை, செயல் முறைப் பரீட்சை என்பவற்றை முடித்துவிட்டு சுமார் 04 வருடங்களாக காத்திருக்கிறார்கள்.இது மிகப்பெரிய அநீதியும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.

இந்த 301 பேருக்கானநேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் தகுதியானர்களுக்குரிய நியமனங்களை வழங்காது விடப்பட்டால் எதிர்காலத்தில் HNDE ஆங்கில ஆசிரியர் நியமனம் எதுவும் வழங்கப்படாத நிலையும் ஏற்படும் ஆபத்துமுள்ளது.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவில் கடமையாற்றிய உயர் அதிகாரிகளின் முறைகேடான செயற்பாடுகள் காரணமாகவே இந் நியமனங்கள் இவ்வளவு காலத்திற்கு இழுத் தடிப்புச் செய்யப்படுகிறது.

எனவே கிழக்கு மாகாண ஆளுனர் இது விடயம் தொடர்பில் அவசரமாக கவனமெடுத்து நியமனங்களை துரிதமாக வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார்.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *