மர்ஹும் றியால் & சிபான் வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் யங்அல்பதாஹ் வசமானது.
ஏறாவூர் யங்அல்பதாஹ் விளையாட்டு கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 அணிகளை உள்வாங்கி நடாத்திய மர்ஹும் றியால் & சிபான் 2024 ம் ஆண்டுக்கான ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி 09/06/2024 ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் யங் அல்பதாஹ் விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் வீ.டீ.கபூர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஷாஹிர் மௌலானா கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம் மற்றும் ஊர் பிரமுகர்கள் , கல்விமான்கள் , விளையாட்டு ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
32 அணிகள் பங்கு கொண்ட சவால்மிக்க இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு ஏறாவூர் யங்அல்பதாஹ் மற்றும் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் என்பன தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியின் போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஏறாவூர் யங்அல்பதாஹ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அம்ஜத் மற்றும் றிபாய் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் பங்களிப்புடன் ஏழு ஓவர் நிறைவின் போது 65 ஓட்டங்களை வெற்றி இலக்காக எதிரணிக்கு நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் ஏழு ஓவரினை எதிர்கொண்டு 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
46 மேலதிக ஓட்டங்களால் ஏறாவூர் யங்அல்பதாஹ் விளையாட்டு கழகம் இச்சுற்றுப்போட்டியின் சம்பியனாக மகுடம் சூடியது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக யங்அல்பதாங் விளையாட்டு கழகத்தின் வீரர் ஏ.எம்.அம்ஜத் தெரிவாகியதுடன் சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக யங்அல்பதாஹ் கழக வீரர் எம்.இஸ்ஸத் தெரிவு செய்யப்பட்டார்.
பலம் பொருந்திய இச்சுற்றுத் தொடரின் சம்பியனாக தெரிவான யங்அல்பதாஹ் விளையாட்டு கழகத்திற்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு என்பன பிரதம அதிதியின் கரங்களால் வழங்கப்பட்டதுடன் மைதான சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றன.
இச்சுற்றுத் தொடரின் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு கல்லேடியர்ஸ் விளையாட்டு கழகம் தன்வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
(உமர் அறபாத் – ஏறாவூர் )