உள்நாடு

பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்தித்துப் பேச்சு..!

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளமையை அவர்களுடன் நேரடியாக உரையாடிய பின்னர் தனக்கு அறியக்கூடியதாக இருந்ததாகவும், நீண்டகால சதியின் இறுதி வடிவமாக இது அமைந்துள்ளது என்பதை காணமுடிகிறது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதியும் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மாணவிகளை தாம் நேரில் சந்தித்து, நடந்த உண்மையான விடயத்தைக் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (09) திருகோணமலை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் அரசியல் அதிகார சபை உறுப்பினர் Dr. ஹில்மி மொஹிடீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி மேலும் கூறியதாவது,

“திருமலை ஸாஹிரா கல்லூரியில் கற்ற 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உயிரியல் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளில் தோற்றிய இந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு, இதுவரை வெளிவராதுள்ளன. இதனால், இந்த மாணவிகள் வேதனையுடனும் மன உளைச்சலுடனும் இருக்கின்றனர். திட்டமிட்டு இந்தச் சதி இடம்பெற்றுள்ளது. சுமார் பத்து வருடங்களாக, தொடர்ச்சியாக வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கி வரும் திருமலை ஸாஹிரா கல்லூரியின் மீது, குறிவைத்து இனவாதம் பாய்ந்துள்ளது. இந்தப் பாடசாலையில் உள்ள திறமையான மாணவர்களை இருட்டடிப்புச் செய்யும் நோக்கில், தவறிழைக்காத இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை திணைக்கள சுற்றுநிருபத்துக்கு அமைய, பர்தா அணிந்து சென்ற மாணவிகளின் காதையும் முகத்தையும் காட்டுமாறு கூறப்பட்டபோது, அவர்கள் அதனை செய்துள்ளனர். 70 மாணவர்களில் 68 மாணவர்கள் பர்தாவை கழட்டிவிட்டு, கையில் வைத்திருந்த துப்பட்டாவினால் தலையை மறைத்துள்ளனர். ஏனைய இரு மாணவிகளும் தமது பர்தாவை கழட்டிவிட்டு, அதையே மீண்டும் தலையில் போட்டுள்ளனர். எல்லோரும் காதையும் முகத்தையும் காட்டியவர்களாகவே பரீட்சை எழுதியுள்ளனர். இவ்வாறான நிலையிலும் மேலதிகாரிகளில் ஒருவர் மாணவிகளை பார்த்து, உங்களது பரீட்சை பெறுபேறுகள் வருவது நிச்சயம் இல்லை என்று கூறியிருக்கிறார். அதுமாத்திரமின்றி, பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருக்கின்றார்.

அத்துடன், பரீட்சை முடிவடைந்து சில நாட்களின் பின்னர், குறித்த மாணவிகள் கொழும்பில் உள்ள பரீட்சை திணைக்களத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், சிலரின் வேண்டுகோளுக்கு அமைய முடிவுகள் மாற்றப்பட்டு, ஒரு சில பரீட்சை திணைக்கள அதிகாரிகள் திருகோணமலைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர், மாணவிகள் தவறிழைத்ததாக எழுத்து மூலம் எழுதித்தருமாறு மாணவிகளை அதிகாரிகள் பணித்துள்ளனர். எனினும், மாணவிகள் தாம் தவறிழைக்கவில்லை என்றும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் எழுதிக் கையொப்பமிட்டுள்ளனர். மேலும், ‘பரீட்சை ஆணையாளர் என்ன முடிவெடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவோம்’ என்று எழுதித் தருமாறும் மாணவிகள் பணிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு எழுத முடியாது என மாணவிகள் மறுத்தபோது, ‘அவ்வாறு எழுதித்தராவிட்டால் உங்களது பரீட்சை பெறுபேறுகள் வெளிவராது’ என அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, வற்புறுத்தியதன் பின்னரே, மாணவியர் விசாரணை அதிகாரிகள் கூறியவாறு எழுதிக்கொடுத்துள்ளனர். இதுவே, திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உண்மை நிலையாகும்.

ஆனால், வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 10 முஸ்லிம் மாணவிகளும் அதே மண்டபத்தில் பரிட்சை எழுதியுள்ளனர். அவர்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இவற்றை பார்க்கும்போது, திருமலை ஸாஹிரா கல்லூரி திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகின்றது.

நான் இன்றும் பரீட்சை பிரதி ஆணையாளருடன் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் குறித்த மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகும் என்று அவர் கூறியிருக்கின்றார். அவ்வாறு பெறுபேறுகள் வராவிட்டால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் குரல் கொடுப்போம். நீதிமன்றத்தையும் நாடுவோம். எங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று கூறினார்.

 

(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா.உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *