இஸ்ரேல் லெபனான் போர் மூளும் அபாயம்..! 20 லட்சம் போராளிகள் லெபனான் செல்ல தயார்..!
இஸ்ரேல் லெபனானுக்கு இடையே பெரும் போர் மூளூம் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் போரை சந்திக்கும் தயார் நிலையில் உள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படாமல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் மீது தங்களது தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். வடக்கில் உள்ள இஸ்ரேலிய நகரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலிய ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் – லெபனானுக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலில் ஹிஸ்புல்லா 1 சதவிகித ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், 99 சதவிகித ராணுவ பலம் இஸ்ரேலை அடித்து துவம்சம் செய்ய தயார் நிலையில் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. தன்னிடம் உள்ள அதிநவீன ராணுவ சாதனங்களை சமயம் வரும்போது இஸ்ரேல் மீது முழு வீச்சில் பயன்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு மிரட்டல் விட்டுள்ளது.
20 லட்சம் போராளிகள் லெபனான் செல்ல தயார்!
லெபனான் மீது படையெடுக்கப் போவதாக இஸ்ரேல் மிரட்டி வரும் இந்த தருணத்தில் ஹிஸ்புல்லா போராளியுடன் சேர்ந்து இஸ்ரேலை எதிர்த்து போரிட ஈரான், ஈராக், சிரியா, ஏமன் நாடுகளில் இருந்து 20 லட்சம் போராளிகள் லெபனான் செல்ல தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்கள் அத்தனை பேரும் முழு ராணுவ பயிற்சி பெற்ற மிகக் கடினமான போராளிகள் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் பில்டப் செய்து கொண்டு மற்ற முஸ்லிம் நாடுகளை பயமுறுத்திக் கொண்டிருந்த இஸ்ரேலின் கொட்டத்தை இத்துடன் அடக்க வேண்டும் என்று ஈரான் உறுதி கொண்டிருக்கிறது. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்குமேயானால் லெபனானுக்கு ஆதரவாக ஈரான் ராணுவம் நேரடியாக யுத்த களத்தில் குதிக்கும் என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள் ஈரானுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கவும் தயாராக இருக்கின்றன. இந்தப் போரில் இஸ்ரேல் தோல்வியடையும் கட்டத்தில் அமெரிக்க நேரடியாக யுத்தத்தில் குதிக்கும் என்று கருதப்படுகிறது. அப்படி அமெரிக்கா நேரடியாக யுத்தத்தில் குதித்தால் ரஷ்யாவும் – சீனாவும் கையைக் கட்டி பார்த்துக் கொண்டு இருக்காது என்பது யாவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். அப்படி ஒரு நிலைமை உருவானால் என்ன நடக்கும் என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாம் உலகப்போருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ரஷ்யாவின் அணுகுண்டு தாங்கிய நீர் மூழ்கி கப்பல்கள் அமெரிக்காவின் கடற்கரையை சுற்றி நகர்த்தப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஒரு கொலைகார ராணுவத்தை தடுத்து நிறுத்தும் வக்கற்ற இந்த உலகம் அழிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று என்ன தோன்றுகிறது.
ஹைப்பா துறைமுகம் அழிந்தது
இஸ்ரேலில் உள்ள மிக முக்கியமான துறைமுகமான ஹைப்பா துறைமுகத்தின் மீது ஒரே சமயத்தில் ஏமனையில் உள்ள யுத்தி போராளிகளும் ஈராக்கில் உள்ள இஸ்லாமிய போராளிகளும் தாக்குதல் நடத்தினர். ஹைப்பா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை மழைப்போல பொழிந்து தள்ளினர். ஈராக்கில் இருந்தும் ஏமனிலிருந்தும் பாய்ந்து வந்து ஹைப்பாவை தீப்பற்றி எரியச் செய்தன. விண்ணை முட்டிக்கொண்டு தீ எரிந்து கொண்டிருப்பதையும் ஹைப்பா நகரம் முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டதையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போராளிகளின் இந்த அதிரடி தாக்குதலினால் அரண்டு போன இஸ்ரேலிய இராணுவம் ஹைப்பாவை விட்டு ஐயோ…. அப்பா…… என்று அலறிக்கொண்டு ஓட்டம் பிடித்தது. எல்லா திசையில் இருந்தும் அழிவு இஸ்ரேலை விரட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது..
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு
போராளிகளிடம் அடி வாங்கி வரும் இஸ்ரேல் ராணுவம் ஆத்திரத்தில் அறிவிழுந்து அகதிகள் முகாம் மீது கன்னாபின்னா என்று குண்டு வீசி தாக்கி வருகின்றது. அன்சுராவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி அப்பாவி மக்களை கொன்று உள்ளது. ஐக்கிய நாட்டு சபையால் நடத்தப்பட்டு வரும் ஒரு பள்ளிக்கூடத்தின் மீதும் குண்டு வீசி அங்கு பயிலும் மாணவர்களை கொன்றுள்ளது.. பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் தம் திட்டத்தை இஸ்ரேல் படிப்படியாக வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதை பார்க்க முடிகிறது.
காஸாவில் தினம் தினம் மக்கள் குண்டடிப்பட்டும், பசி பட்டினியாலும் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். அறிக்கை, கண்டனம், போராட்டம், ஆர்ப்பாட்டம், நீதிமன்றம் என்று உலக நாடுகள் காலத்தை உருட்டி கொண்டிருக்கின்றன. படுகொலையை தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்த பாடு இல்லை. முஸ்லிம் நாடுகளின் அதிபர்கள் அறிக்கை அரசர்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் உதட்டில் வீர உரைகள் உதிர்வதையும் செயலில் கோழைத்தனம் கோலோச்சுவதையும் காண முடிகிறது. இஸ்ரேல் மீது முஸ்லிம் நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்கும் என்று துருக்கி அதிபர் எருடோகான் வீர வசனம் பேசியது நமக்கு எல்லாம் ஞாபகம் இருக்கிறது. நடவடிக்கை எப்போது? ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் புதைக்குழியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகா? முஸ்லிம் உம்மாவின் இந்த வினாவிற்கு முஸ்லிம் நாட்டு அதிபர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
தொடரும்..
(கே.டி. கிஸர் முஹம்மது)
நன்றி: மணிச்சுடர்