விளையாட்டு

இலகு வெற்றியை பாகிஸ்தான் கோட்டைவிட , திரில் வெற்றி பெற்றது இந்தியா.

9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் 20ஆது லீக் ஆட்டத்தில் பரம வைரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ஓட்டங்களால் திரில் வெற்றியைப் பதிவு செய்தது.

கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்திருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குழு ஏ இன் போட்டி நேற்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு நசாவு மைதானத்தில் ஆரம்பமாகவிருந்தது. இருப்பினும் மழை காரணமான 8.50 இற்கு போட்டி ஆரம்பிக்க நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தது.

இதற்கமைய இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ரோஹித் மற்றும் கோஹ்லி ஜோடி களம் புகுந்ததுடன் முதல் பந்து ஓவரை ஷஹீன் அப்ரீடி வீச முதல் பந்தில் 2 ஓட்டமும் 4ஆது பந்தில் இமாலய சிக்சரையும் விளாசிய ரோஹித் முதல் ஓவரில் 8 ஓட்டங்களை பெற்றிருக்க மீண்டும் மழை குறுக்கிட போட்டி இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் சுமார் 25 நிமிடங்களின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பிக்க 2ஆவது ஓவரை நஷீம் ஷா வீச 4 ஓட்டத்திற்கு பந்தை விரட்டியடித்த கோஹ்லி அடுத்த பந்தில் பிடி கொடுத்து வெளியேறினார். பின்னர் ரோஹித் 13 ஓட்டங்களுன் பெவிலியன் திரும்பி ஏமாற்றினார். பின்னர் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்த அக்சர் பட்டேல் மற்றும் ரிஷப் பாண்ட் ஜோடி தமக்கிடையில் 39 ஓட்டங்களைப் பெற்றிருக்க அக்சர் பட்டேல் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் நிலைக்காமல் சொற்ப ஓட்டங்களுடன் ஆ;டமிழக்க நம்பிக்கை கொடுத்த ரிஷப் பாண்ட் 42 ஓட்டங்களுடன் ஆமிரின் வேகத்தில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த ஜடேஜா (0), சூரியகுமார் யாதவ் (7), ஹர்திக் பாண்டியா (7), ஆகியோர் தொடராக பெவிலியன் திரும்ப பந்துவீச்சாளர்களும் நிலைக்காமல் போக இந்திய அணி 19 ஓவர்களில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நஷீம் ஷா மற்றும் ஹரிஸ் ரௌப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 120 ஓட்டங்கள் என்ற மிகச் சவால்மிக்க இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களான ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் 26 ஓட்டங்களை இணைப்பாட்டமாகச் சேர்திருக்க பாபர் அஸாம் 13 ஓட்டங்களுடன் பும்ராவின் வேகத்தில் வெளியேறினார் .அடுத்து வந்த உஸ்மான் காண் தன் பங்கிற்கு 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட பக்கர் சமான் 13 ஓட்டங்களுடன் வெளியேற பாகிஸ்தான் அணியின் சரிவு அப்போது ஆரம்பமானது.

அணிக்கு நம்பிக்கை கொடுத்து நின்ற ரிஸ்வான் 31 ஓட்டங்களுடன் 4ஆவது விக்கெட்டாக ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமானது. பின்னர் வந்த வீரர்களான சதாப்கான் (4) , இப்திகார் அஹமட் (5) , இமாத் வஸீம் (15) ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவு கலைந்து போனது.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள இந்திய அணி 5 ஓட்டங்களால் திரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. பந்துவீச்சில் பும்ரா14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டி ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *