கட்டுரை

துல்ஹஜ்ஜின் மகத்தான முதல் பத்து நாட்கள்.

ஒவ்வொரு மாதமாய் கடந்துவந்து மாதங்களிலெல்லாம் இறுதி மாதமான துல்ஹஜ் மாத ஆரம்பத்தில் இருக்கின்றோம்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டி, அதில் வெற்றி கண்ட மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தமது வாழ்க்கையில் எடுத்து நடந்தால் அவர் புனிதராக இறை நேசராக ஆகிவிடலாம்.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விடத்தில் மற்ற நாட்களை விட மிக மகத்தான நாட்கள். மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற அமலை விட, இந்த 10 நாட்களில் செய்யப்படுகின்ற அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமானது.

துல்ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரியவை என்று சிலாகித்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள் இதற்கென்று விசேடமாக ஏதாவது அமல்களைக் காட்டித் தந்துள்ளார்களா? என்றால் அப்படி ஏதும் ஹதீஸ்களில் கிடையாது.

தனிப்பட்ட விசேட அமல்கள் இல்லா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும். பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுது வருவது. பர்ளுடைய முன்-பின் ஸுன்னதுக் களை பேணித் தொழுது வருவது, தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய அவ்ராதுகளை சரியாகத் தொடராக ஓதி வருவது, காலை-மாலை நேரங்களிலும், ஓய்வு கிடைக்கும் போதும் குர்ஆனை ஓதிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது குறிப்பாக அந்த பத்து நாட்களிலும் பாவமான விடயங்களை விட்டும் ஒதுங்கி நல்லறங்கள் செய்வதில் தங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த துல்ஹஜ் மாதத்தைப் பொறுத்தவரை ஹஜ் கடமைகள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ஹஜ் காலத்தில் அந்த குறிப்பிட்ட நாட்களில் செய்யப்படும் அமல்களுக்குப் பகரமாக அல்லாஹ் சுவர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். துல்ஹஜ் பிறை 8-லிருந்து பிறை 10 வரை குறிப்பிட்ட ஹஜ் கடமைகள் முடி வடைந்து விடுகின்றன.

இதில் 9ஆம் நாளான அரபா நாள் ஹாஜிகளுக்கும், ஹஜ் செய்யாமல் அவரவர் ஊரிலே தங்கியிருக்கும் அடியார்களுக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். ஏன் என்றால் பல நாடுகளிலிருந்து வந்த அனைத்து ஹாஜிகளும் ஒன்று கூடும் இடமாக அந்த அரபா மைதானம் அமைந்துள்ளது.

அன்றைய நாள் ஹாஜிகள் ஒன்று கூடுவதின் மூலம் அந்த மைதானத்திற்கும் ஹாஜிகளுக்கும் சிறப்பு கிடைக்கிறது. அந்த அரபா நாளன்று நோன்பு பிடிப்பது ஊரில் உள்ளவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் ஸுன்னத்தாக நடை முறைப்படுத்தியுள்ளார்கள். அன்றைய நாளில் நோன்பு பிடிப்பது மூலம் அடியார்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

“எவர் அரபா நோன்பை பிடிக்கிறாரோ அவர் ஒரு வருட முன் செய்த பாவத்தையும் பின் ஒரு வருட பாவத்தையும் (அல்லாஹ்) மன்னிக்கிறான்.” (முஸ்லிம்)

துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாள் ஹஜ் பெருநாளாகும். அன்றைய நான் சிறப்புக்குரிய நாளாகும். குறிப்பாக பெருநாள் தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ் விற்காக குர்பான் கொடுப்பதின் மூலம் இன்னும் அன்றைய தினம் இதன் மூலம் அமல்கள் அலங்கரிப்படுகிறது. அந்த இறைச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் சந்தோசமாக அன்றைய நாளை கழிப்பதற்கு அமைந்து விடுகிறது. மேலும் அந்த 10ம் நாள் அதிகாலையிலிருந்து தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ் போன்ற திக்ருகளை செய்வதின் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

(பயாஸா பாஸில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *