ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்குவது மக்கள் பொறுப்பாகும் – ஐ.தே.க அமைப்பாளர் ஆமிர் நஸீர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்றது முதல் இன்று வரை நாட்டை சரியான முறையில் வழி நடாத்தி முழு உலகினதும் பாராட்டை பெற்றுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் வழங்குவது நாட்டு மக்களின் கடமையாகும் என பேருவளை களுத்துறை நகர சபை பகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் கழுத்துறை நகர பிதாவுமான ஆமிர் நஸீர் கூறினார்.
களுத்துறையில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் பூரண ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சி அமைப்பாளர்களையும் பிரதேச பொறுப்புதாரிகளையும் கட்சி நியமித்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் களுத்துறை மற்றும் பேருவளை தேர்தல் தொகுதிகளில் களுத்துறை நகர சபை பிரிவு மற்றும் பேருவளை நகர சபை பிரிவுக்கும் அமைப்பாளராக களுத்துறை முன்னாள் நகர பிதா ஆமிர் நஸீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஊடக சந்திப்பில் மேலும் கூறியதாவது,
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு தூரமாகிய கட்சி ஆதரவாளர்களை ஒன்று திரட்டி கட்சியை மீண்டும் சக்தி பெற செய்து இனிவரும் தேர்தல்களில் கட்சி ஆதரவாளர்களின் முழுமையான பங்களிப்புடன் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க என்னால் முடியுமான அனைத்தையும் பெற்றுக் கொடுப்பேன் என முன்னாள் நகர பிதா ஆமிர் நஸீர் தெரிவித்தார்.
பேருவளை மற்றும் களுத்துறை நகர சபை பகுதியில் வாழும் மூவின மக்களையும் நேரடியாக சென்று மக்கள் சந்திப்புக்களை வைத்து கட்சியை மேலும் பலப்படுத்த உழைப்பேன். இளைஞர் – யுவதிகளை திரட்டி ஐ.தே.கட்சி இளைஞர் மற்றும் மாதர் அணிகளையும் உருவாக்குவேன். எனவே கடந்த காலத்தில் கட்சியை விட்டு தூரமாகியவர்கள் மீண்டும் எம்மோடு இணைய வேண்டும் அதன் மூலம் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்று கொடுக்க கைகோர்ப்போம் என்றார்.
ஜனாதிபதி அதல பாதாளத்தில் விழுந்து இருந்த நாட்டை தைரியமாக அன்று பொறுப்பேற்றார். அவரின் தூரநோக்கு கொண்ட நடவடிக்கையின் காரணமாக பொருளாதார முயற்சியில் விரைவான முன்னேற்றம் கண்டது. இதனை இன்றும் முழு உலகும் போற்றிப் புகழ்கிறது. உலக நாடுகள் அவருக்கு கைகொடுத்து வருகிறது.நாட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை நாட்டு மக்கள் இன்று அறிந்துள்ளனர்.எனவே எதிர்வரும் தேர்தலில் அவரின் வெற்றிக்காக சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் சமூகங்கள் ஒன்றுபட்டு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
(பேருவளை பி.எம்.முக்தார்)