தொடர் தோல்வியால் சுப்பர் 8 சுற்றை கேள்விக்குறியாக்கியிருக்கும் இலங்கை அணி
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் குழு டீ இற்கான மிக முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் போராடி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இலங்கை அணியின் சுப்பர் 8 சுற்று கேள்விக்குறியாகியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் குழு டீ இல் இடம்பிடித்துள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் மிக மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு இடம்பெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை டல்லஸ் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துடன் இலங்கை அணி களமிறங்கியிருக்க போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணியை துடுப்பாடப் பணித்தது.
இதற்கமைய களம் நுழைந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி களம்நுழைய குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்துவந்த தனஞ்சய டி சில்வா ஆரம்ப Pரரான பெத்துமுடன் இணைந்து ஓட்ட வேகத்தை சற்று உயர்த்தியிருக்க பெத்தும் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்த போட்டியில் இலங்கை அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்ங்களைப் பெற்று வலுவான நிலையிலிருக்க சரித் அசலங்க 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அணித்தலைவரான வனிந்து ஹசரங்க கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் கொடுக்க சற்று நம்பிக்கை கொடுத்த தனஞ்சய டி சில்வா 21 ஓட்டங்களுடன் நடையைக் கட்ட பின்வரிசையில் சானக்க (3) தீக்சன (0) மெத்யூஸ் (16) என நிலைக்காமல் போக இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் முஸ்தபிசுர் மற்றும் ரிஷாட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் 125 என்ற மிக இலகுவாக வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் கண்ட பங்களாதேஷ் அணிக்கு முன்வரிசை வீரர்கள் ஏமாற்றம் கொடுத்த போதிலும் மத்திய வரிசையில் வந்த லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீட் ஹரிடோய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி 36 மற்றும் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க பின்வரிசையில் வந்த அனுபவமிக்க வீரரான முஹம்மதுல்லாஹ் ஆட்டமிழக்காமல் 16ஓட்டங்களை அடித்துக் கொடுக்க பங்களாதேஷ் அணி 19 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்தது. பந்துவீச்சில் நுவான் துஷார 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
இப் போட்டியிலும் தோற்ற இலங்கை அணி 2ஆம் சுற்றான சுப்பர் 8 சுற்றுக்குச் செல்வது கேள்விக்குறியாகியுள்ளதுடன் , அடுத்த 2 போட்டிகளில் அயர்லாந்து மற்றும் நேபாள் அணியை இலங்கை அணி எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.