உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடிய சவூதி அரேபியா..!
சவூதி அரேபிய இராச்சியம் , ஜூன் 5, 2024 புதன்கிழமை, அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தினை, “நமது பூமி, நமது எதிர்காலம்” எனும் கருப்பொருளின் கீழ் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் கொண்டாடியது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பல அதிகாரிகள், நிபுணர்கள், இன்னும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதில் பங்கேற்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்வமுள்ள மக்கள் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளை முன்னெடுத்து வந்தனர். இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான சர்வதேச ஈடுபாட்டை விளக்கி நிற்கிறது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்துடன் இணைந்து, உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளை சவூதி அரேபியா நடாத்தியது. இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் ஸுஊத், அவர்களது தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வானது, அனைத்து மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு செய்வதில் அதன் உயர் இலக்குகளோடு இணங்கிச்செல்லும் “இராச்சியத்தின் விஷன் 2030” என்ற குறிக்கோளைத் தாங்கி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இயற்கை, மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதிலும், காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வதிலும் உலகளாவிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாபெரும் முன்னேற்பாட்டை சவூதி அரேபிய இராச்சியம் தொடங்கியுள்ளது. அவையாவன “சவூதி அரேபியாவின் பசுமை” மற்றும் “மத்திய கிழக்கு பசுமை” முன்னேற்பாடுகள் என்பனவாகும். சவூதி அரேபிய இராச்சியத்தில் 10 பில்லியன் மரங்கள் உள்ளடங்கலாக, மத்திய கிழக்கில் (50) பில்லியன் மரங்களை நடுவது இம்முயற்சிகளின் பிரதானமான நோக்கமாகும். இது உலகளாவிய காடு வளர்ப்பின் 5 சதவீதத்துக்கு சமமான இலக்காகும். இம்முயற்சிகள் உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளில் பெரும்பகுதியை அடைவதற்கு பங்களிப்புச்செய்யும்.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்கள், நிலச் சீரழிவு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை நிவர்த்தி செய்வதில் கூடிய கவனம் செலுத்தின. இந் நிகழ்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தியமை சிறப்புக்குரியது. இயற்கைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கைகள் மற்றும் செயல்களில் உலகளாவிய முதலீடுகளின் அவசரத் தேவைப்பாட்டை இந்த நிகழ்வுகள் எடுத்து சொல்லியது. நிலையான வளர்ச்சியின் மூலம் இலக்குகளை அடைவதற்காக, உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் மறுசீரமைக்கவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சவூதி அரேபிய இராச்சியத்தின் முயற்சிகள் பற்றி அனைவரும் அறிந்துள்ளனர். 2020ஆம் ஆண்டு G20 உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, உலகளாவிய நிலத்துக்கான முன்னேற்பாடுகளை தொடங்குவதில் இராச்சியம் முக்கிய பங்காற்றியது. இதன் நோக்கம் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பினை ஊக்குவிப்பதாகும். மேலும், இராச்சியம், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 2024 டிசம்பர் 2 முதல் 13 வரை ரியாத்தில் COP 16 இன் பதினாறாவது அமர்வை நடாத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த அமர்வு நிலப் பாதுகாப்பு மற்றும் பாலைவனமாதல், வறட்சி போன்ற பேரழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் மாபெரும் மாநாடாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில், உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியமையானது, பசுமை சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் இராட்சியத்தின் முன்னோடியான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. இதற்காக, சவூதி அரேபியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாவரங்களின் நிலைத்தன்மை மேம்பாடு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவை உள்ளூர் மற்றும் பிராந்திய சமூகங்களில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.