துல்ஹிஜ்ஜா தலைப்பிறை மாநாடு இன்று.
துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (7) மஃரிப் தொழுகையின் பின்னர் பிறைக்குழுவின் தலைவர் அல்ஹாஜ் ஹிஷாம் பத்தாஹி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இத் தினத்தில் சூரியன் மாலை 1824 மணிக்கு மறைகின்றது இதேவேளை சந்திரன் மாலை 1921 மணிக்கு மறைகின்றது. சூரியன் மறைந்து சந்திரன் அடிவானத்தில் தென்படக்கூடிய கால எல்லை 57 நிமிடங்களாகும். இந்த கால எல்லைக்குள் தலைப்பிறை காண்பது மிகவும் இலகுவானது. ஆனபோதிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக சீரற்ற காலநிலை நிலவுகின்றது. குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் மேலே குறிப்பிட்ட கால எல்லைக்குள் தலைப்பிறை தென் படக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் தலைப்பிறை தென்படக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. இவ்வாறு 7 ஆம் திகதி தலைப்பிறை தென்படும் பட்சத்தில் 2024.06.17 ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடக்கூடியதாக இருக்கும்.
ஆனபடியினால் இலங்கையில் வாழும் முஸ்லிம் பொதுமக்கள் 2024 ஜூன் 7ஆம் திகதி பிறை பார்க்கும் ஸ்தலங்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பிறைக்குழு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வீண் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
பிறை சம்பந்தமான எந்த விடயங்களாயினும் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்பு கொண்டு உங்களது ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளுமாறும் பணிவாய்க் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரியும்
பிறைக்குழு உறுப்பினரும்.