விளையாட்டு

சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது அமெரிக்கா

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பலமிக்க பந்துவீச்சு வரிசையைக் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்பர் ஓவரில் 5 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது அமெரிக்கா அணி.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் ஆட்டம் டல்லஸ் மைதானத்தில் நேற்று இலங்கை நேரப்படி இரவு 9 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களான மொஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் ஜோடி களம் நுழைய மொஹம்மது ரிஸ்வான் 9 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த உஸ்மான்கான் 3 ஓ;டங்களுடன் நடையைக் கட்டினார்.

பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பக்கர் ஜமான் தந்தித்த முதல் பந்தை 6 ஓட்டத்திற்கு பறக்கவிட்டு நம்பிக்கை கொடுத்த போதிலும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

இருகப்பினும் களத்திலிருந்து பொறுப்புடன் அணித்தலைவர் பாபர் அஸாம் ஆட மற்றைய வீரரான சதாப்கான் அதிரடியை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகம் அதிகரித்தது. இந்த ஜோடி தமக்கிடையில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க சதாப்கான் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் அஸாம்கான் கோல்டன் டக் ஆகி மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார்.

தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அதிரடிக்கு மாறுகையில் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல பின்வரிசையில் வந்த சகீன் அப்ரீடி தன்பங்கிற்கு 23 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கென்ஜிஹே 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர் 160 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த அமெரிக்க அணிக்கு ஆரம்ப வீரரான டெய்லரை 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் களத்திலிருந்த அணித்தலைவரான மொனன்ங் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தானின் பலமிக்க வேகப்பந்துவீச்சு வரிசை ஆட்டம் கண்டது.

இரண்டாவது விக்கெட்டில் பட்டேல் அண்ரீஸ் கோஸ் உடன் இணைந்து 68 ஓட்டங்களை சேரத்திதிருக்க கோஸ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் 3ஆவது விக்கெட்டில் இணைந்த பட்டேலுடன் இணைந்த ஆரென் ஜோன்ஸ் ஒரு புரம் அதிரடி காட்ட பட்டேல் அரைச்சதம் பதிவு செய்து 50 ஓட்டங்களுடன் வெளியேறினார். இருப்பினும் களத்திலிருந்து அணியின் வெற்றிக்காகப் போராடினார் ஆரென் ஜோன்ஸ்.

இறுதி ஓவரில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு 15ஓட்டங்கள் தேவையாய் இருக்க பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரிஸ் ரௌப் பந்தினை வீசி ஒற்றை மற்றும் இரட்டை ஓட்டங்களை வழங்க இறுதி 3 பந்தில் 12 ஓட்டங்கள் தேவையாய் இருக்க ஜோன்ஸ் 6 ஓட்டத்தை விளாசியதுடன்; அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். இறுதியில் 1 பந்தில் 5 ஓட்டங்கள் தேவையாய் இருக்க நிடிஸ் குமார் அந்தப் பந்தை மிட் ஓன் திசையில் அடித்து 4 ஓட்டத்தை பெற போட்டி சமநிலையானது.

இதனால் சுப்பர் ஓவர் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்க பாகிஸ்தான் அணி சார்பில் முஹம்மது ஆமிர் பந்துவீச்சுக்கு அழைக்கப்பட ஆரம்ப வீரர்களாக அமெரிக்க அணி சார்பில் ஆரென் ஜோன்ஸ் மற்றும் ஹர்மீட் சிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த சுப்பர் ஓவரில் ஒரு 4 ஓட்டம் ஜோன்ஸினால் அடிக்கப்பட்டதுடன் உதிரிகளாக 7 ஓட்டங்கள் கிடைக்கப்பெற அமெரிக்கா அணி 6 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் 6 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் பெற்றால் மாத்திரமே வெற்றி என்ற நிலையில் இப்திகார் மற்றும் பக்கர் ஸமான் ஆகியோர் களம் நுழைந்தனர். இதில் 3 பந்துகளை எதிர்கொண்ட இப்திகார் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழக்க 3 பந்துகளை எதிர்கொண்ட சதாப்கான் 3 ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள உதிரியாக 6 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் பாகிஸ்தான் அணியால் 6 பந்துகளில் 13 ஓட்டங்களையே பெற முடியுமாகிப் போக 5 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அமெரிக்க அணி ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சரித்திரபுர்வமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *