விராட் கோஹ்லியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் பாபர் அஸாம்.
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இருந்த இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லியின் சாதனையை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் பாகிஸ்தான் அணியின் தலைவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரருமான பாபர் அஸாம்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 9ஆவது ரி20 உலக்கிண்ணத் தொடர் தற்சமயம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் 11ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பலப்பரீட்சை நடாத்தி வருகின்றன. இப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவரான பாபர் அஸாம் 40 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதன் காரணமான சர்வதேச ரி20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இருந்த விராட் கோஹ்லியின் முதலிடத்தை தன் வசமாக்கிக் கொண்டார் பாபர் அஸாம்.
அதற்கமைய இதுவரையில் 120 சர்வதேச ரி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள பாபர் அஸாம் 3 சதங்கள் 36 அரைச்சதங்களுடன் 4067 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக 118 போட்டிகளில் பங்கேற்று 1 சதம் மற்றும் 37 அரைச்சதங்களைப் பெற்று 4038 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ள விராட் கோஹ்லி 2ஆம் இடத்திற்குக் கீழிறங்கியுள்ளார்.
இப் பட்டியலில் 3ஆம் இடத்தில் இந்திய அணியின் தலைவரான ரோஹித் சர்மா 155 போட்டிகளில் 4026 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இம் 3 துடுப்பாட்ட வீரர்களுமே 4000 ஓட்டங்களை இதுவரையில் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)