உள்நாடு

போர்வை வெள்ள வரலாற்றில் முதலாவது உயிர் பலி..!

முஸ்லிம் சமூகத்தில் தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற கிராமங்களில் ஒன்றே போர்வை ஆகும்.

இது கொடபிடிய, பானதுகம, போரதொட மற்றும் ஹவ்பே ஆகிய 4 கிராம சேவகப் பிரிவுகளை உள்ளடக்கிய முஸ்லிம் கிராமமாகும்.

இப் பிரதேசமானது பிரசித்து பெற பிரதான காரணம் கந்தூரி, அடுத்த விடயமே வெள்ளப் பெருக்காகும்.

1948, 1969, 2003, 2017, 2023 என குறிப்பிட்டுக் கூறும் விதமாக பல பாரிய வெள்ளப் பெருக்குகளும் வருடந்தோரும் குறைந்தது ஒரு சிறு வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் ஒரு ஊரே இவ்வூர்.

போர்வை வெள்ளத்திற்கும் போர்வை முஹியந்தீன் ஜும்மா மஸ்ஜித்துக்கும் தொடர்பு ஏற்பட்ட பிரதான இடம் 1948 ஆம் ஆண்டு வெள்ளமாகும்.

போர்வை பிரதேசத்தில் உள்ள பழைய நூதான பொருட்களில் ஒன்றே சட்டி ஹவுள் என்று கூறப்படும் சுமார் 20 அடி விட்டமும், 2.5 அடி உயரமுள்ள பித்தளை சட்டியாகும்.

சிலர் இந்த சட்டி பற்றி பல்வேறுபட்ட கதைகளைச் சொன்னபோதும் உண்மையில் இந்த பாத்திரம் சீனி தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட சட்டியாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் பரந்துவ பிரதேசத்தில் சீனி காய்க்க பயன்படுத்திய குறித்த சட்டியை, அக்கம்பனி மூடிய காலப்பகுதியில் அதன் உரிமையாளர்கள் போர்வை முஹியந்தீன் ஜும்மா மஸ்ஜிந்துக்கு வழங்க தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் 1948 ஆம் ஆண்டு போர்வையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தின் போது மிதந்து பள்ளிவாசல் வளவுக்கு வந்ததாகவும், ஊர் மக்கள் வெள்ளத்தில் தள்ளிக் கொண்டு வந்ததாகவும் இரு விதமாக பிரதேச வாய் மொழி வரலாற்றுக் கதைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் கடந்த 2003-05-17 ஆம் திகதியன்று ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து ஊரில் மண் வீடுகளுக்கும் குடிசைகளுக்கும் பதிலாக கல் வீட்டுத் திட்டம், சுய தொழிலுக்கான நிதி உதவி, பாடசாலை இரு மாடிக் கட்டிடங்கள் அமைப்பு என பல அபிவிருத்தி திட்டங்கள் முஸ்லிம் சமூக, அரச, சர்வதேச உதவிகளை கொண்டு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சோதனைகளுக்கு பின்னால் சந்தோஷம் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக போர்வை வெள்ள வரலாறு பயணிக்கிறது.

கடந்த 2023 ஆண்டை பொருத்தவரை 2023-05-16 ஆந் திகதி ஒரளவு பாரிய வெள்ளத்துடன், தொடர்ந்து ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்கள் இப்பிரதேசம் மாத்தறை மாவட்ட பல ஆற்றுப்படுக்கை (பண்ட்) பிரதேசங்கள் நீரில் மூழ்கி காணப்பட்டது.

இறுதியாக 2024-06-02 ஆந் திகதி நள்ளிரவு தொடக்கம் (03:00am) 283.5mm கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் (5:00am) முதல் நீர் மட்டம் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இதன்படி குறித்த வெள்ளமானது பாணந்துகம ஆற்று மட்டத்திலிருந்து சுமார் 7.89 m ஆக பதிவாகியது. மேலும் பள்ளிவாசலை அண்மித்த பிரதான வீதியில் நில மட்டத்திலிருந்து அண்ணளவாக 5 அடியாகவும், பள்ளிவாசலின் உட்பகுதியில் சுமார் 1.5 அடி மூழ்கியது.

மேலும் இப்பிரதேச பாடசாலையாகிய கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய சிரேஷ்ட பிரிவு மற்றும் கனிஷ்ட பிரிவு என்பனவும் நில மட்டத்திலிருந்து  சுமார் 3.5 அடி அளவில் மூழ்கியது. இதனால் கீழ் மாடி வகுப்புக்கள், விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன நீரில் மூழ்கியுள்ளது. நீரோட்டம் பாடசாலையை ஊடறுத்து செல்வதால் பாடசாலை காணியில் அதிகளவான குப்பைகளும் தேங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 580 முஸ்லிம் குடும்பங்களில் 400 குடும்பங்களும் அவர்களுடைய  450 வீடுகளில் சுமார் 300 வீடுகள் முற்றாகவும், பாதியளவிலும் மூழ்கியது.

மேலும் தீடிரென நீர் மட்டம் இரவு 4 மணி முதல் அதிகரித்தமையினால் கடைகளுக்கு பொருட் சேதம் அதிகம். அதிலும் குறிப்பாக M.T.M ஸாஜஹான் என்பவரின் கடைக்கு பொருட் சேதங்களுக்கு மேலதிகமாக தளபாட சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல வெள்ளங்களை எதிர் கொண்ட குறித்த ஊர் மக்களுக்கு மேற்படி வெள்ளமானது அதிக சோகத்தை ஏற்படுத்த பிரதான காரணம் போர்வை வெள்ள வரலாற்றில் முதலாவது உயிர் சேதம் ஏற்பட்டதாகும்.

அல்லாஹ்வின் அருளால் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் வெள்ளத்தில் மூழ்கி மரணித்த மரணங்கள் பதிவாகவில்லை. என்றாலும் எதிர்பாராத விதமாக இம் முறை கடந்த 02.06.2024 அன்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 26 வயது மதிக்கத்தக்க இன்ஹாம் என்ற இளைஞர் நீரில் முழ்கி மரணமடைந்தார்.

நீச்சல் ஆளுமையுள்ள, அஞ்சா நெஞ்சமுள்ள, பிறருக்கு பல கஷ்டங்களின் போது துணிந்து உதவி செய்கின்ற குறித்த இளைஞனின் மரணம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

வெலிகமை அகீல் ஹாஜியார் அவர்களின் உணவகத்தில் பெயர் பெற்ற சமையற்காரராக பணியாற்றிய குறித்த இளைஞன் ஞாயிற்றுக் கிழமை ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அறிந்து தனது தாய், மனைவி, பிள்ளைகளை பார்க்கவென வெள்ள அனர்த்த நிலமையில் ஊரிற்கு வருகை தந்துள்ளான்.

வெள்ளப்பெருக்கு காரணமாக வெலிகம – போர்வைக்கான நேரடி போக்குவரத்து தடைப்பட்டதால் வெலிகமையிலிருந்து காலியிற்கு சென்று அங்கிருந்து ஊரிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் வாகனப் போக்குவரத்து இன்மையால் நீச்சல் ஆளுமையுள்ள குறித்த இளைஞன் அமலகொட, திப்பட்டுவாவ, பானந்துகம ஆகிய பிரதேசங்களில் நீந்தியும் படகு சேவை உள்ள பிரதேசங்களில் படகிலும் என்று ஊரை வந்தடைந்துள்ளார்.

போர்வைக்கு வந்த குறிந்த இளைஞன் மதிய உணவை மனைவியின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நீரில் மூழ்கிய ஊரின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளான்.

இறுதியாக மாலை நேரத்தில் ரஸீனா வீதியில் உள்ள தன் தாயின் வீட்டிற்குச் சென்று தன் தாய் மற்றும் அங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தஞ்சமடைந்திருந்த உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் இரவுச் சாப்பாட்டிற்காக தேங்காய்ச் சம்பலை தயாரித்துக் கொடுத்துவிட்டு ஊரின் மறு முனையில் உள்ள தன் மனைவியின் வீட்டிற்கு செல்லவென புறப்பட்டுள்ளார்.

இடையில் தடுமாறிக் கொண்டிருந்த பெண்ணொருத்திக்கு கை கொடுத்து காப்பாற்றியதோடு, கொடவத்த வீதியில் உள்ள மாயா முதளாளி வீட்டில் தஞ்ச மடைந்துள்ளோர்க்கு குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக குழாய் ஒன்றைப் பொருத்தி விட்டு 5.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறிச் செல்கையில் “தண்ணீர் வீச்சு அதிகமாக உள்ளது எனவே கவனமாக செல்லுமாறு” மாயா முதலாலி கூறியுள்ளார்.

குறித்த இளைஞன்அங்கிருந்து தன் மனைவி வீட்டிற்கு நீந்திச் செல்கையில் சுமார் 6.25 மணியளவில் நீர் வீச்சல் அதிகமுள்ள நியாஸ் நாநா வீட்டினருகே கால் கெண்டை பிரண்டு நீச்சல் வேகம் குறையவே தடுமாறி “காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள்” என கூச்சலிட்டவாறு எதிர் நீச்சலடித்துள்ளான்.

இதனை அவதானித்த 16 வயது மதிக்கத்தக்க சப்ராஸ் என்ற இளைஞன் அவனை காப்பாற்றுவதற்காக இன்ஹாம் தத்தளித்த குறித்த வயல் வெளியில் பாய்ந்துள்ளான். என்றாலும் வீச்சல் அதிகமாக இருந்ததோடு மின்சாரத் துண்டிப்பு காரணமாக இருளாகவும் இருந்ததனால் சப்ராஸினால் இன்ஹாமை காப்பாற்ற முடியவில்லை.

எனவே சப்ராஸ் நீர் வீச்சல் உள்ள திசையிலே சென்று எதிர் முனையில் உள்ள தன் வீட்டிற்கு அருகே கரை சேர்ந்துள்ளார்.

துரதிஷ்டவசமாக இருளில் எதிர் நீச்சலடித்து அடித்து கரையை அடைய முயற்சித்த இன்ஹாம்; முயற்சி பலனின்றி வயல் வெளியில் மூழ்கியுள்ளான்.

இச் செய்தியை கேள்வியுற்ற ஊர் மக்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்கள் விரைவாக படகில் வந்து பல மணி நேரம் இருளில் தேடியும் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

மீண்டும் மறுநாள் காலை 6.00 மணியளவில் ஊர் இளைஞர் குழுவினர் இணைந்து குறித்த இடத்தில் தேடலில் ஈடுபடுகையில் உயிரற்ற நிலையில் குறித்த இளைஞன் மூழ்கிய இடத்திலேயே சுமார் 6:30 மணியளவில் சகோதரன் இன்ஹாமின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

போர்வை பிரதேசமானது பல ஆண்டுகளாக நீரில் மூழ்கும் பிரதேசமாகும். குறிப்பாக வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த 1970-1980 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட ஜின் – நில்வள ஆற்றுப்படுக்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்யாமை, அதிவேக வீதி அமைப்பிற்கு குளங்களையும், நீரோட்டமுள்ள வயல்களையும் மறைத்து வீதி அமைத்தமை என்பன பிரதான காரணமாகும்.

மேலும் இஸ்லாமிய வழிகாட்டல்களின் படி முஸ்லிமான நல்லடியார்களின் ஈமானை அதிகரிக்கச் செய்யவும், பாவிகளின் பாவங்களை மன்னிக்கவும் இவ்வாறான சோதனைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

 

(இப்னு அஸாத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *