உள்நாடு

நுரைச்சோலையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒருதொகை இஞ்சியுடன் இருவர் கைது…!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இஞ்சி, நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த இஞ்சி கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி – உச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் நுரைச்சோலை பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், மூன்று மீன்பிடி இயந்திர படகுகள், மூன்று என்ஜின்கள் மற்றும் இருப்பிடத்தின் திசையைக் கண்டறியும் ஜி.பி.எஸ் கருவியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 29 மூடைகளில் அடைக்கப்பட்ட 1456 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை சந்தையில் இஞ்சியின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *