விளையாட்டு

ஐசிசி நியாயமற்றமுறையில் நடந்து கொண்டுள்ளது. – வனிந்து பகிரங்க குற்றச்சாட்டு

”4 போட்டிகளை நாங்கள் 4 வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளமை நியாயமற்றது. நாங்கள் ப்ளோரிடா மற்றும் மியாமி நகரிலிருந்து விமானத்தை பிடிக்க 8 மணி நேரம் காத்திருந்தோம்”. என மிகுந்த வருத்தத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை கடந்த 3ஆம் திகதிஎதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இலங்கை ஆரம்பத்திலேயே குழு நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது.

அப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 77 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. இவ்வாறு குறுகிய ஓட்டத்திற்குள் இன்னிங்ஸை நிறைவு செய்தமையால் ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தமது அதி குறைந்த ஓட்டங்கள் என்ற மோசமான சாதனையையும் பதிந்து கொண்டது. அதனால் இலங்கை ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தொடரில் தங்களுடைய லீக் சுற்று போட்டிகளை ஐசிசி வடிவமைத்த விதம் நியாயமற்றதாக இருப்பதாக இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க ஊடக சந்திப்பில் விமர்சித்துள்ளார். அதாவது தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூயார்க் நகரில் விளையாடிய இலங்கை அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக டாலஸ் நகரில் விளையாட உள்ளது. அங்கிருந்து நேபாலுக்கு எதிரான போட்டியில் லாடர்ஹில் நகரில் விளையாடும். மேலும் இலங்கை அணி தமது இறுதி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுனயில் உள்ள செயின்ட் லூசியா நகரில் விளையாட உள்ளது.

அப்படி 4 வெவ்வேறு மைதானங்களில் 4 போட்டிகள் நடைபெறுவதால் அங்குள்ள சூழ்நிலைகளை தங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். அதனால் தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் மீண்டும் இலங்கைக்கு கிளம்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வனிந்து குறிப்பிடுகையில் ”4 போட்டிகளை நாங்கள் 4 வெவ்வேறு மைதானங்களில் விளையாடடுவது நியாயமற்றது. நாங்கள் ப்ளோரிடா மற்றும் மியாமி நகரிலிருந்து விமானத்தை பிடிக்க 8 மணி நேரம் காத்திருந்தோம். இங்கிருந்து நாங்கள் இரவு 8 மணிக்கு செல்ல வேண்டும். ஆனால் விமானம் காலை 6:00 மணிக்கே உள்ளது. இது எங்களுக்கு நியாயமற்றது. ஏனெனில் அதன் காரணமாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு எங்களால் உட்பட முடியவில்லை. ஹோட்டலிலிருந்து மைதானத்திற்கு வர ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் தேவைப்படுகிறது. அதற்கு நாங்கள் காலை 5:00 மணிக்கு எழுந்து வர வேண்டியுள்ளது. இருப்பினும் களத்தில் விளையாடும் போது அது முக்கியமல்ல.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *