மோசமான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் குழு டி இற்கான முதல் ஆட்டத்தில் துடுப்பாட்ட வீரர்கள் கோட்டைவிட்டமையால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்காலால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் குழு டீ இற்கான போட்டிகள் நேற்று ஆரம்பித்திருந்தன. இதில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் நியூயோர்க்கில் உள்ள நசாவு அகடெமி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதற்கமைய முதலில் களம் நுழைந்த ஆரம்ப வீரர்களான பெத்தும் நிசங்க 3 ஓட்டங்களுடன் முதல் விக்கெட்டாக வீழ்ந்து ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த கமிந்து மெண்டிஸ் (11) மற்றைய ஆரம்ப வீரரான குசல் மெண்டிஸ் (19) என நிலைக்காமல் வெளியேறினர். ஓட்டங்களை வேகமாக சேர்க்க களம்நுழைந்த அணித்தலைவரான வனிந்து ஹசரங்க , வந்த வேகத்திலே மஹராஜின் சுழலில் டி கொக்கினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு டக்அவுட் ஆக, அடுத்து வந்த சதீர சமரவிக்ரம முதல் பந்திலே போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சரித் அசலங்க 6 ஆட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது.
பின்னர் இணைந்த மெத்யூஸ் மற்றும் சானக்க ஜோடி 3 ஆறு ஓட்டங்களை விளாசி ஆறுதல் கொடுத்த போதிலும் சானக்க 9 ஓட்டங்களுடனும், மெத்யூஸ் 16 ஓட்டங்களுடனும் வெளியேற ஏனைய வீரர்களும் நிலைக்காமல் போக இலங்கை அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மிரட்டிய அன்ரிச் நொட்ரிஜே 4 ஓவர்களில் 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்க, ரபாடா மற்றும் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 78 என்ற மிகச் சுலபமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப வீரரான ரீசா ஹெண்ரிக்ஸ் 4 ஓட்டங்களுடன் துசாரவின் வேகத்தில் வெளியேறினார். பின்னர் வனிந்துவின் சுழலில் டி கொக் (20), ஸ்டப்ஸ் (13) என வெளியேறினர். பின்னர் மக்ரம் 12 ஓட்டங்களுடன் சானக்கவின் வேகத்தில் வெளியேற தென்னாபிரிக்க அணி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டது. இருப்பினும் களத்திலிருந்த க்ளாஸன் 19, மில்லர் 6 ஓட்டங்களுடன் நிலைத்திருக்க தென்னாபிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்தது.
(அரபாத் பஹர்தீன்)