சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்மத் நற்சான்றிதழ்களின் திறந்த பிரதிகளை வழங்கி வைத்தார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் ஜூன் 2ஆம் திகதி, ரியாதிலுள்ள சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் தலைமை அலுவலகத்தில் வைத்து சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் நெறிமுறைப் பிரதியமைச்சர் அப்துல் மஜீத் பின் ரஷீத் அல் ஸமரியிடம் தனது நற்சான்றிதழ்களின் திறந்த பிரதிகளை வழங்கி வைத்தார்.
பிரதியமைச்சர் அப்துல் மஜீத் – தூதுவர் அமீர் அஜ்வத்தை அன்புடன் வரவேற்றதுடன் இராச்சியத்தில் அவரது பணி சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தூதுவர் அமீர் அஜீத் , தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால இராஜதந்திர உறவுகளின் விளைவாக தற்போது காண்கின்ற அடைவுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
தூதுவர் அமீர் அஜ்வத் – இலங்கையின் இராஜதந்திர சேவையில் 26 வருட அனுபவங்களைக் கொண்ட தொழில்வாண்மை மிக்க ஒரு இராஜதந்திரி. சவூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமனம் பெற்று வருவதற்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயல் திட்டமிடல், அமுலாக்கல் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் உட்பட்ட செயற்திறன் மீளாய்வு, அரசியல் விவகாரம் (ஆபிரிக்க பிராந்தியம்), தூதரக விவகாரங்கள் மற்றும் இலங்கை அவசரகாலத் துலங்கல் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான மேலதிக செயலாளராகப் பணியாற்றியுள்ளார்..
வெளிவகார அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு போன்றவற்றுக்கு தலைவராக பணியாற்றியதோடு வெளிவகார அமைச்சின் கடல் கடந்த
நிர்வாகத்திற்கான பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.
2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் ஓமான் இராச்சியத்துக்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய – அமீர் அஜ்வத் , சமகாலத்தில் எமன் குடியரசுக்கான அதிவிசேட திறமை வாய்ந்த பூரண அதிகாரம் கொண்ட தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
2018 தொடக்கம் 2019 வரை சமகாலத்தில் புரூணை தாருல் ஸலாம் பிராந்தியத்தையும் உள்ளடக்கியதாக சிங்கப்பூர் உயர் ஸ்தானிகராகவும், இந்தியாவில் சென்னைக்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராகவும் (2011 – 2015), சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதுவராகவும் (2005 – 2009) மற்றும் ரியாத்திலுள்ள – இலங்கை தூதரகம் (2000 – 2003) போன்ற பதவிகளையும் வகித்தார்.
தூதுவர் அமீர் அஜ்வத் – பல சர்வதேச மற்றும் பிராந்திய மாநாடுகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான தேசிய கொள்கை அமுலாக்கக் குழு (NCOLPI), வேலை வாய்ப்புக்கான இடம் பெயர்வுடன் தொடர்பான தேசிய ஆலோசனை குழு (NACME), தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுவின் செயற்குழு (NDMCC) உட்பட பல தேசிய ஆலோசனை குழுக்களின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சட்டமாணி (LLB), சட்ட முதுமாணி (LLM) பட்டம் பெற்ற தூதுவர் அமீர் அஜ்வத் – பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் (BA) பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக உள்வாங்கப்பட்ட தூதுவர் அமீர் அஜ்வத், சமீபத்தில் இலங்கை – ஓமான் உறவுகள்: கடந்த காலம், நிகழ் காலம்
மற்றும் எதிர் காலம் என்ற தலைப்பில் ஆங்கிலம், அரபு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சர்வதேச உறவுகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார்.